×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடிலில் இருந்து வெளியே வந்த தெய்வானை யானை ஜாலி உலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, புத்துணர்ச்சிக்காக குடிலில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவ.18ம் தேதி பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் தெய்வானை யானை தாக்கியதில் உயிரிழந்தனர்.

இதையடுத்து தற்போது வரை கோயில் யானை வனத்துறை, கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறையின் பாதுகாப்பிலும், பாகன்களின் அரவணைப்பிலும் இருந்து வருகிறது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி பாகன்கள் யானையை கண்காணித்தும், உணவளித்தும் வருகின்றனர். பாகன்களின் கட்டளைக்கு வழக்கம்போல செவி சாய்க்கும் யானை, தற்போது உற்சாகமாக காணப்படுகிறது. அதனை குடிலிலேயே குளிப்பாட்டி, நவதானிய உணவுகள், மற்றும் பச்சை நாற்றுகளை பாகன்கள் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.

கடந்த டிச.6ம் தேதி யானையை மருத்துவ பரிசோதனை செய்த மாவட்ட வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், யானை இயல்பு நிலைக்கு முழுவதும் திரும்பி விட்டதால் பகல் நேரங்களில் ஆள்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நடைபயிற்சி செய்வதற்கு அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து இதற்கான பணிகளை பாகன்கள் தொடங்கி உள்ளனர்.

நேற்று காலை புத்துணர்ச்சிக்காக கோயில் ராஜகோபுரம் அருகேயுள்ள தங்கும் குடிலில் இருந்து பாகன் செந்தில்குமார் தெய்வானை யானையை வெளியே அழைத்து வந்தார். அப்போது மிகவும் உற்சாகமாக வெளியே வந்த யானை நேராக நடந்து வந்து தனது துதிக்கையை தூக்கி கோயில் வளாகத்தில் இருந்த வேப்பமரத்தில் இருந்து இலையை கொய்தது. அதனை துதிக்கையால் தனது கால், உடலில் புத்துணர்ச்சிகாக தேய்த்தது. இதனை பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

அருகில் வந்த சேவலும், மயிலும்
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அதிகளவில் மயில்கள் வசிக்கின்றன. இவை ராஜகோபுரம் பகுதி, கோயில் வளாகத்தில் உள்ள மரங்களில் தங்கியிருக்கும். அவை அவ்வப்போது கோயில் வளாகத்தில் கிரிப்பிரகாரத்தில் அகவிக்கொண்டும், தோகை விரித்தாடியும் இருக்கும். அதேபோல கோயிலுக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கும் சேவல் கூவும் சத்தமும் கேட்கும். இந்நிலையில் சுமார் 28 நாட்களுக்குப் பிறகு தெய்வானை யானை தங்கும் குடிலின் முன்புறம் வந்து நின்றதை பார்த்த மயிலும், சேவலும் அருகில் வந்து நின்றன. இதனை பக்தர்கள் தூரத்தில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

The post திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடிலில் இருந்து வெளியே வந்த தெய்வானை யானை ஜாலி உலா appeared first on Dinakaran.

Tags : Deivanai ,Subramania Swamy Temple ,Tiruchendur ,Bagan Udayakumar ,Sisubalan ,Deivanai.… ,Dinakaran ,
× RELATED ஒரு மாதத்திற்கு பிறகு திருச்செந்தூர்...