திருமங்கலம், டிச. 17: மகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐயிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமங்கலம் செங்குளத்தினை சேர்ந்தவர் கண்ணையா(70). ஓய்வு பெற்ற எஸ்.ஐ. இவரது மகன் வீரமுத்து. திருப்பரங்குன்றம் அருகேயுள்ள தனக்கன்குளத்தினை சேர்ந்தவர் பிரேம்ஆனந்த். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்கள் கண்ணையாவிடம் அவரது மகன் வீரமுத்துவுக்கு வனத்துறையில் வனக்காப்பாளர் அல்லது டிரைவர் பணி வாங்கித்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கண்ணையா, அவர்கள் கேட்ட ரூ.6 லட்சம் தொகையை கடந்த 27.12.2018ம் தேதி அன்று பிரேம்ஆனந்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால் சொன்னபடி அவர்கள் அரசு வேலை வாங்கி தரவில்லை என்பதுடன் பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பணம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓய்வு எஸ்.ஐயிடம் ரூ.6 லட்சம் மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.