புதுச்சேரி : புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியில் பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தற்போது உயர்த்தப்பட்ட ஷூட்டிங் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், ஷூட்டிங் சைட் மேனஜர் புதுச்சேரி குமரன் ஆகியோர் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசியுள்ளனர். இதைத் தொடர்ந்து புதுச்சேரி கடற்கரையோரம் உள்ள சீகல்ஸ் ஓட்டல் (அரசு கட்டிடம்) பார்க்க நன்றாக இருக்கிறது. அதனை விலைக்கு கொடுக்கலாமே என இயக்குனர் விக்னேஷ் சிவன் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை கேட்டு ஆடிப்போன அமைச்சர், அது அரசின் கட்டிடம், அங்கு சுற்றுலாத்துறை ஊழியர்கள் 300 பேர் வேலை செய்கிறார்கள். தெரிந்துதான் கேட்கிறீர்களா? என்னை காலி செய்துவிடுவீர்கள் போல என அதிர்ச்சியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அரசு ஓட்டலை விலைக்கு கேட்டாரா என்று இணையத்தில் பலரும் அவரை கிண்டல் செய்யத் தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அதை வைத்து பலரும் மீம்ஸ்களை பகிரத் தொடங்கினார்கள். இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள செய்தியில், ““துச்சேரியில் அரசு சொத்தை வாங்க முயன்றாக பரவி வரும் செய்தி குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் புதுச்சேரி விமான நிலையத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி பெற சென்றிருந்தேன்.
அப்போது மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்தேன். என்னுடன் வந்த உள்ளூர் மேலாளர், உணவகம் குறித்து அமைச்சரிடம் பேசினார். அதைக் காரணமே இல்லாமல் என்னுடன் இணைத்து பரப்பிவிட்டார்கள்.மீம்ஸ்கள், வீடியோக்கள் என உருவாக்கப்பட்ட அனைத்துமே வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவை தேவையற்றவை. எனவே இதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
The post புதுச்சேரி அரசு சொத்தை விலைக்கு கேட்கவில்லை : இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் appeared first on Dinakaran.