புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதையடுத்து பல கட்ட விராசணைக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 26ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சியாக உள்ளவர்கள் அவருக்கு கீழ் பணியாற்றியவர்கள். எனவே இந்த வழக்கு விவகாரத்தில் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் மோசடி புகார் வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும். ஏனெனில் வழக்கை தொடர்ந்து ஒத்திவைக்ககோரி கோரிக்கை வைக்கப்படுகிறது. இதனால் விசாரணை இழுத்தடிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால் அது இந்த வழக்கின் விசாரணையை பாதித்துள்ளது. எனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.