×

பலாத்கார வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை கோரிய நடிகை மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் இறுதிக்கட்ட விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்தக் கோரிய நடிகையின் மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. கடந்த 2017ம் ஆண்டு பிரபல மலையாள நடிகை திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது முன்னாள் கார் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக தெரியவந்ததை தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கு குறித்த தகவல்கள் வெளியானால் தன்னுடைய எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் திறந்த நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்று பாதிக்கப்பட்ட நடிகை ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதை நீதிமன்றம் ஏற்றது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருவதால் இறுதிக்கட்ட விசாரணையை திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று கோரி விசாரணை நடைபெற்று வரும் எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட நடிகை கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், நடிகையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post பலாத்கார வழக்கு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை கோரிய நடிகை மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ernakulam court ,Thrissur ,Kochi ,
× RELATED பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரி...