புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1951ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு வந்தது.
பின்னர், பதவிக்காலம் முடியும் முன்பே ஆட்சி கவிழ்ந்ததாலும், பல்வேறு விவகாரங்களாலும் பதவிக்காலங்கள் மாறின. இதற்கிடையே, ஒன்றியத்தில் பாஜ கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மீண்டும் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், தேர்தல் செலவுகள் குறையும் என்றும், அரசு நிர்வாகம் மேம்படும் என்றும் பாஜ கட்சி கூறி வருகிறது. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டுமெனில், சில மாநிலங்களின் பதவிக் காலத்தை குறைக்க வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலத்திற்கு முன்பே கலைப்பது மக்களாட்சிக்கு எதிரானது. இது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல், நடைமுறை சாத்தியமற்றது என பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாத ஒன்றிய பாஜ அரசு, கடந்த 2018ம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழுவை கடந்த ஆண்டு அமைத்தது.
இக்குழு, 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வழங்கியது. அதில், 2029ம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் 18 திருத்தங்கள் மற்றும் உட்பிரிவுகளை கொண்டு வர பரிந்துரை செய்தது. இப்பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஒன்றிய அரசு, 3 சட்ட மசோதாக்களை கொண்டு வர திட்டமிட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவது உட்பட 2 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு மட்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வரைவு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82ல் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த திருத்த மசோதாவுக்கு 50 சதவீத மாநிலங்களின் ஒப்புதல் அவசியமில்லை.
இதுதவிர, புதுச்சேரி, டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய சட்டப்பேரவைகளைக் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கு இதர மாநில சட்டப்பேரவைகளுடன் தேர்தல் நடத்துவதற்கான 2வது சட்ட திருத்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லியின் தேசிய தலைநகர் அரசுச் சட்டம், யூனியன் பிரதேசங்களின் அரசு சட்டம், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் ஆகிய சட்டங்களில் திருத்தம் செய்யப்படும். இது அரசியலமைப்பு சட்ட திருத்தமாக இல்லாமல் சாதாரண சட்ட திருத்தமாக இருக்கும்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த 2 மசோதாக்களும் அடுத்த வாரம் நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட இருப்பதால், இவை நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படலாம். எனவே உயர்மட்ட குழு மூலம் பல்வேறு மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அதானி லஞ்ச விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் என கடும் அமளி நிலவி வரும் நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது தேசிய அரசியல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
* ‘மாநிலங்களின் குரலை அழித்துவிடும்’ மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: கொடுங்கோன்மைக்கு வழிவகுக்கும், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை மாநிலங்களின் குரலை அழித்துவிடும்; கூட்டாட்சி இயலை சிதைத்துவிடும்; அரசின் ஆட்சி நிர்வாகத்துக்கு தடையினை ஏற்படுத்தும். எழுக இந்தியா! இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* மசோதா நிறைவேற்றுவது சாத்தியமா?
அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 3ல் 2 பங்கு பலம் ஒன்றிய அரசுக்கு தேவை. தற்போது, இத்தகைய பலம் அரசுக்கு இல்லை. மக்களவையில் மொத்தம் 543 எம்பிக்களில் ஒரு இடம் காலியாக உள்ளது. இதில் 3ல் 2 பங்கு பலம் என்பது 361 எம்பிக்களின் ஆதரவு தேவை. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 293 எம்பிக்களே உள்ளனர். இந்தியா கூட்டணி 235 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. மாநிலங்களவையில் மொத்தம் 243 எம்பிக்களில் பாஜ கூட்டணிக்கு 122 எம்பிக்கள் உள்ளனர். எனவே இரு கூட்டணியிலும் அல்லாத பிற கட்சிகளின் ஆதரவை பெற பாஜ முயற்சிக்கும். ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பாக இருப்பதால் தற்போதைய சூழலில் மசோதாவை நிறைவேற்றுவது சவாலானதே.
* ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயகத்தை நசுக்கவும் செய்கின்ற முயற்சி. இந்த கொடூரமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்கள் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். டெல்லியின் சர்வாதிகார செயல்களுக்கு மேற்கு வங்கம் ஒருபோதும் அடிபணியாது. எங்களின் இந்த போராட்டம், எதேச்சதிகாரத்தின் பிடியில் இருந்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கானது’’ என்றார்.
* திசை திருப்பும் முயற்சி
காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத்தலைவர் கவுரவ் கோகோய் அளித்த பேட்டியில், ‘‘இந்த மசோதா மூலம் நாட்டின் கூட்டாட்சியில் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்தியா கூட்டணி பெரும் கவலை கொண்டுள்ளது. பிரதமர் மோடி எப்போதுமே பேசுவதை செயலில் காட்ட மாட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார். ஆனால் அரியானா, மகாராஷ்டிரா தேர்தல்கள் தனித்தனியாக நடத்துகிறார். உங்களால் மகாராஷ்டிரா, அரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தலையே ஒரே நேரத்தில் நடத்த முடியவில்லை. அப்படியிருக்கையில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அரசு தயாராக இருக்கிறதா? இந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். தேர்தல் செயல்பாட்டில் மக்களுக்கு உள்ள சந்தேகத்தை திசைதிருப்ப முயற்சிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்’’ என்றார்.
திமுக எம்பி திருச்சி சிவா அளித்த பேட்டியில், ‘‘இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். எங்களிடம் நிறைய கேள்விகள் உள்ளன. அவைகளுக்கு அரசு விரிவான முறையில் பதிலளிக்க வேண்டும். மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டால், அவர்கள் அனைத்து மாநில சட்டப்பேரவைகளையும் கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவார்களா?’’ என்று கேள்வி எழுப்பினார். ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே அதானி என்ற முழக்கம்தான் மோடி அரசின் முழக்கம்’’ என்றார்.
அதிமுக உள்ளிட்ட 32 கட்சிகள் ஆதரவு
* முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு நடத்திய ஆலோசனையின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு 47 கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டன. அதில், அதிமுக உட்பட 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
* 1952, 1957, 1962, 1967ம் ஆண்டுகளில் மக்களவை, சட்டப்பேரவை இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்துள்ளது.
* 1968-69ல் புதிய மாநிலங்கள் உருவானதைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் தேர்தல் நடைமுறை மாறியது.
* 1983ல் தேர்தல் ஆணையம் தனது வருடாந்திர அறிக்கையில் மீண்டும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை முன்மொழிந்தது.
* 1999ல் சட்ட கமிஷன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது.
* தென் ஆப்ரிக்கா, ஸ்வீடன், பெல்ஜியம், ஜெர்மனி, ஜப்பான், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் தற்போதும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இந்நாடுகளின் தேர்தல் நடைமுறையை உயர்மட்ட குழு ஆய்வு செய்து பல திருத்தங்களை பரிந்துரைத்துள்ளது.
* சாலை விபத்தில் உபி முதலிடம்
நமது நாட்டில் ஆண்டுக்கு 1.78 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். இதில் 60 சதவீதம் பேர் 18-34 வயதுக்குட்பட்டவர்கள் என்று மக்களவையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ சட்டத்தை கண்டு மக்கள் பயப்படுவதில்லை.பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். இது ஒரு விசித்திரமான சூழ்நிலை. சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளில் உத்தரப்பிரதேசம் முன்னணியில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 23,000 பேர் ஒரே ஆண்டில் இறந்துள்ளனர்.
மொத்த இறப்புகளில் 13.7 சதவீதம் பேர் ஆவர். தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. அங்கு சாலை விபத்துக்களால் 18,000 (10.6 சதவீதம்) பேர் உயிரிழந்துள்ளனர். 3வது இடத்தை பிடித்த மகாராஷ்டிராவில் 15,000 பேர் பலியாகி உள்ளனர். இது மொத்த இறப்புகளில் ஒன்பது சதவீதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து 13,000 (எட்டு சதவீதம்) இறப்புகளுடன் மத்தியப் பிரதேசம் உள்ளது. பெரு நகரங்களில், 1400 இறப்புகளுடன் டெல்லி முதலிடத்திலும், 915 இறப்புகளுடன் பெங்களூரு இரண்டாவது இடத்திலும் உள்ளது. 3வது இடம் பிடித்த ஜெய்ப்பூரில் சாலை விபத்துகளில் 850 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றனர்.
* 1,300 ஐஏஎஸ், 586 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி
நமது நாட்டில் ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் 1,316, ஐபிஎஸ் 586 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ நமது நாட்டில் அனுமதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையான 6,858 ஐஏஎஸ் பணியிடங்களில் 2024 ஜனவரி 1 நிலவரப்படி, 5,542 அதிகாரிகள் பணியில் உள்ளனர். 5055 ஐபிஎஸ் பணியிடங்களில் 4,469 பேர் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 1,316 ஐஏஎஸ் பணியிடங்களில் 794 இடங்கள் நேரடியாகவும், 522 பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும். காலியாக உள்ள 586 ஐபிஎஸ் பணியிடங்களில் 209 இடங்கள் நேரடி நியமனம் மூலமும், 377 இடங்கள் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்பட உள்ளன. இந்திய வனப் பணி அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 1,042 ஐஎப்எஸ் பணியிடங்களில் 503 நேரடியாகவும், 539 பதவி உயர்வு மூலமும் நிரப்பப்பட உள்ளன’ என்றார்.
The post எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல்: ஒன்றிய அமைச்சரவை வழங்கியது; அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாக வாய்ப்பு appeared first on Dinakaran.