கடலூர் : கடலூர் மாநகராட்சி ஆணையர் டாக்டர் அனு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாநகராட்சி பகுதிகளில் காலி மனைகள், நீண்ட நாட்களாக போதிய பராமரிப்பு இல்லாமல், தற்போது வடகிழக்கு பருவமழையால் அதிக மழைநீர் காலிமனையில் தேக்கம் ஏற்பட்டு, குடியிருப்புகள் பாதிப்பும், பொதுப்பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக தொடர்ந்து புகார்கள் மற்றும் களப்பணிகள் வாயிலாக தெரிய வருகிறது.
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவ கனமழை மற்றும் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக நகரப்பகுதியில் நீரால் சூழப்பட்டதை பொதுப்பணிகள் அவசியம் கருதி உரிய பணிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது.
மேற்படி நிலையில் தனியாருக்கு சொந்தமான காலிமனைகளில் தேக்கமடைந்த மழைநீரை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்தாமல், பொதுசுகாதார பாதிப்பு ஏற்படும் வகையிலும், சிலர் தேக்கமடைந்த நீரை அருகில் உள்ள பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பூங்காக்கள், நியாயவிலைக்கடை வளாகங்கள், பள்ளி வளாகங்கள் ஆகியவற்றிற்கு நீர் உந்து செய்தும், பராமரிப்பு இல்லாது மரக்கழிவுகள் அகற்றாமல் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்பட்டு பொதுசுகாதாரம் பாதிப்பு அடையும் வகையில் உள்ளது.
மேலும், தனியார் மனைகளில் சில குடியிருப்பு வாசிகள் மழைநீர் அகற்றுவது என்ற பெயரில் பொது பாதைகளுக்கு சேதம் ஏற்படுத்தி வருவதும் அறியப்படுகிறது.
எனவே, நகர் பகுதியில் உள்ள காலிமனை உரிமையாளர்கள் மேற்படி தங்கள் காலிமனைகளில் தேக்கமடைந்துள்ள மழைநீர் பொதுசுகாதார அவசர அவசியம் கருதி, உரிய முறையில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும், அவ்வாறு அகற்றும்போது பொது வளாகங்களில் மழைநீர் விடுவது தவிர்த்தும் பொதுப்பாதைகளுக்கு சேதம் விளைவிக்காமல் பணிகளை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தவறினால், பொதுமக்களுக்கு பொதுசுகாதார நோக்கில் பாதிப்பு ஏற்படும் பணியிலும், பொதுப்பணிகளுக்கு குந்தகம் ஏற்படும் செயல்களிலும் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்ட விதிகளின் கீழும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர் மீது மேற்கொள்ளப்படும் சட்ட விதிகளின்படி அபராதம் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார்.
The post கடலூர் மாநகராட்சி பகுதியில் காலி மனைகளில் மழைநீர் தேக்கத்தை அப்புறப்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.