×

செவிலிமேடு அருகே ரூ.100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

காஞ்சிபுரம்: கோயில் நகரம், பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு மாநில, மாவட்டங்களில் இருந்து வந்து செல்கின்றனர். குறிப்பாக, காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை என்பது மிக முக்கியமான சாலையாகவும், அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ள சாலையாகவும் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு அருகே பாலாற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் நலனுக்காக உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் அமைக்கப்பட்டாலும் விபத்து, திருமணம் உள்ளிட்ட நாட்களில் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் அப்பகுதியில் காணப்படுவதாகவும், இதனால் பொது போக்குவரத்து காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனால், மாநில நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை சார்பில், அப்பகுதியில் ஒரு உயர்மட்ட பாலம் கட்டி போக்குவரத்து நெரிசல் குறைக்க திட்டமிட்டப்பட்டது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் ஆலோசனையின்பேரில், கோட்ட பொறியாளர் முரளிதரன் தலைமையில் திட்ட மதிப்பீடு மற்றும் அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, மாநில நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் பெற அனுப்பப்பட்டது. இந்த, திட்ட மதிப்பீடு தற்போது பொதுமக்கள் நலன் கருதி ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இதற்கான பணிகள் துவக்கம் மற்றும் பணிகள் மேற்கொள்ளும் நிலைகள் குறித்து காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்றில் மாநில நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, இப்பணிக்கான திட்ட வரைபடம் கொண்டு திட்டங்கள் குறித்து கோட்ட பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளருக்கு விளக்கங்கள் அளித்து சுமார் 30 நிமிடம் ஆய்வில் ஈடுபட்டனர். மேலும், புதிய மேம்பாலம் அமையும் நிலையில் இருவழி பாதையாக மாறுவதால், நெரிசல் முற்றிலும் குறையும் என்பதால் இத்திட்டம் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என தெரிவித்தனர்.ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முரளிதரன், உதவி கோட்ட பொறியாளர் இளங்கோ, உதவி பொறியாளர் விஜய் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post செவிலிமேடு அருகே ரூ.100 கோடியில் நடந்து வரும் பாலாற்று மேம்பால பணியினை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sevilimedu ,Kanchipuram ,Kanchipuram-Vandavasi road ,
× RELATED காஞ்சிபுரம் காந்தி சாலை...