×

பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி மாடு மேய்த்த முதியவர் பலி

மதுராந்தகம், ஜன.5: மதுராந்தகம் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக பலியானார். மதுராந்தகம் ஒன்றியம், எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசர் கோயில் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (67). மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர், வழக்கம்போல் நேற்று முன்தினம் அரச கோயில் கிராம பாலாற்று கரையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர்மழையின் காரணமாக தொடர்ந்து பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அங்கு மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஏழுமலை, தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து மதுராந்தகம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் பாலாற்றில் அடித்து செல்லப்பட்டவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இதனால், இரவு தேடும் பணி கைவிடப்பட்டு சென்ற தீயணைப்பு வீரர்கள், நேற்று காலை மீண்டும் பாலாற்றில் அடித்துச்செல்லப்பட்ட ஏழுமலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, எல்.என்.புரம் பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் செல்லும் பாலாற்றில் முதியவர் ஏழுமலையின் உடலை, தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த படாளம் போலீசார், ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post பாலாற்று வெள்ளத்தில் மூழ்கி மாடு மேய்த்த முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Palattu flood ,Madhurantakam ,Palattu ,Ezhumalai ,Arasar Koil ,L.N.Puram ,Dinakaran ,
× RELATED இருளர் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு