கூடுவாஞ்சேரி, ஜன.4: கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக வந்தவாசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், வழித்தட எண் 208 என்ற அரசு பேருந்தை சரிவர இயக்குவதில்லை என்றும் பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து சேலம், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகர்கோயில், மதுரை, திண்டுக்கல், போளூர், திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக வந்தவாசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக்கோரி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், வழித்தட எண் 208 என்ற அரசு பேருந்து சரிவர இயக்குவதில்லை என்றும் பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர். இதுகுறித்து பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், கீழ்சீசமங்கலம், கீழ்கொடுங்காலூர், மருதாடு, கடைசிகுளம் வழியாக வழித்தட எண் 208 என்ற அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பிட்ட நேரத்துக்கு சரிவர இயக்கப்படுவதில்லை. மேற்படி, பேருந்து எப்போது வரும், எப்போது செல்லும். மேற்படி வழிதடத்தில் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை.
மேலும், வந்தவாசிக்கு செல்லும் பேருந்துகள் நிற்கக்கூடிய இடத்தில் திருவண்ணாமலை மற்றும் போளூர் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால், மேற்படி வழித்தடத்தில் செல்லக்கூடிய பேருந்துகள் எங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன என்ற விவரம் தெரியாமல் அலை மோதி திரிகின்றனர். மேலும், மேற்படி வழித்தடத்தில் இயக்கக்கூடிய பேருந்துகள் சரிவர இயக்காததால் பேருந்து பயணிகள் குறித்த நேரத்திற்குள் சென்று வர முடியாமல் பேருந்துக்காக மணி கணக்கில் காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிவர கண்காணிப்பதும் கிடையாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டு கொள்ளவில்லை. எனவே, மேற்படி வழிதடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மருவத்தூர் வழியாக வந்தவாசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.