×

பருவ மழையின் போது அகற்றப்பட்டு சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்ட மரத்துண்டுகளால் விபத்து அபாயம்

 

ஊட்டி, டிச. 11: நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் நவம்பர் வரையிலான கால கட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் பெய்வது வாடிக்கை. இந்த பருவ மழைகளின் போது மண்சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட இடர்பாடுகள் ஏற்படும். குறிப்பாக யூகாலிப்டஸ் எனப்படும் கற்பூர மரங்கள் அதிகளவு வேருடன் பெயர்ந்து குடியிருப்புகள், வாகனங்கள், கால்நடைகள் மற்றும் சில சமயங்களில் மனிதர்கள் மீது விழுந்து உயிரிழப்புகளையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.

இந்நிலையில் நடப்பு ஆண்டு தென்மேற்கு பருவமழையின் போதும், கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையின் போதும் ஊட்டி, குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கற்பூர மரங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தின. இவை உடனுக்குடன் வெட்டப்பட்டன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்திருந்த அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

அவ்வாறு அகற்றப்பட்ட மரங்கள் முறையாக அகற்றப்படாமல் சாலையோரங்களில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலை குறுகியுள்ளதுடன், விபத்துகள் ஏற்பட கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே சாலையோரங்களில் கிடத்தி வைக்கப்பட்டுள்ள ராட்சத மரத்துண்டுகளை வெட்டி அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post பருவ மழையின் போது அகற்றப்பட்டு சாலையோரம் கிடத்தி வைக்கப்பட்ட மரத்துண்டுகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளைக்கிழங்கு அறுவடை பணிகள் மும்முரம்