சென்னை: அந்தரத்தில் பறந்தபடி மெரினா கடற்கரையின் இயற்கையை ரசிக்கும் வகையில், பிரமிப்பை ஏற்படுத்தும் ரோப் கார் சேவையை விரைவில் தொடங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான கட்டுமான பணிகளுக்கு மாநகராட்சி டெண்டர் கோரியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக சென்னை திகழ்கிறது. வர்த்தகத்துக்கு மட்டுமல்லாமல், சென்னையில் பல்வேறு விதமான சுற்றுலா தலங்களும் உள்ளன. இதனால் ஆண்டுதோறும் சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரையை ரசிக்காமல் செல்ல மாட்டார்கள். இதற்கு காரணம், உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளதுதான். நாள்தோறும் கடற்கரையில் நடைபயிற்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரளுகின்றனர். மேலும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா திகழ்கிறது. மாலை நேரங்களில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதுதவிர தலைவர்களின் நினைவிடங்களும் அமைந்து இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்கனவே நீச்சல் குளம், பூங்காக்கள், வாக்கிங் நடைபாதை, ராம்ப் வாக் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மெரினா கடற்கரையில் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான மெரினாவில் கூடுதலாக வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு விதமான திட்டங்களை கொண்டு வர சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், மெரினா கடற்கரையின் இயற்கையை ரசிக்கும் வகையில் ரோப் கார் சேவையை தொடங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இதையடுத்து சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பூங்காக்களை உருவாக்குதல், கடற்கரை சாலைகளை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக செம்மொழி பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஆகியவைகளை குறிப்பிடலாம். இப்போது, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் நகரை அழகுபடுத்த புதுவித யோசனைகளை முன்வைக்குமாறு மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டார். அதில் ஏராளமான புதிய யோசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கவுன்சிலர்கள் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை தொடங்கலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதை தொடர்ந்தே இந்த திட்டத்துக்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுதொடர்பான பேச்சுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், திட்ட வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ஆலோசனை, விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்கலாம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான உத்தேச பட்ஜெட்டாக ரூ.25 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வரும் 17ம் தேதியை கடைசி தேதியாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்குள் இந்த டெண்டரை பெறுவதற்கான தகுதியுள்ள நிறுவனங்கள் டெண்டருக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மக்களின் நீண்டகால கோரிக்கையான ரோப் கார் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அந்தரத்தில் பறந்து கடற்கரையின் இயற்கையை ரசிக்கலாம் மெரினாவில் ரோப் கார் சேவை விரைவில் தொடங்க முடிவு: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது மாநகராட்சி appeared first on Dinakaran.