×

தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்: ஏராளமானோர் கைது

சென்னை: ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தை இயற்ற ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. பெரு நிறுவனங்களின் கடனை ரூ.24 லட்சம் கோடிக்கு தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யாமல் பயிர் கடன் பெற்ற விவசாயிகளின் சொத்துகளை ஜப்தி செய்கிறது.
கோரிக்கைகளுக்காக டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு, கண்ணீா் புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நேற்று விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நேற்று திரண்டனர். பின்னர், ஊர்வலமாக புறப்பட்டு, திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 55 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் 35க்கும் மேற்பட்டோர் எர்னாகுளம்- காரைக்கால் விரைவு ரயிலை மறிக்க ரயில்வே கேட் அருகே வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ரயில்வே கேட் அருகே ஆர்ப்பாட்டம் செய்து கலைந்து சென்றனர். திருவாரூரில் 50 விவசாயிகள் எர்ணாகுளம்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். பிரதான நுழைவாயிலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 7 பெண்கள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை: மதுரை ரயில் நிலையம் முன்பு சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி ஒன்றிய அரசை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டவாறே கோஷமிட்டனர். இதில், விவசாய சங்க பிரநிதிகளும், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர். ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். ஆனாலும், தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

சேலம்: தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில், மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் சேலம் ஜங்ஷனுக்கு நேற்று திரண்டு வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை ரயில் நிலைய நுழைவாயிலில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் நாராயணசாமி நாயுடு பிரிவு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு தலைமை யில் போராட்டம் நடத்தினர். அங்கு 28 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் நடந்த போராட்டத்திற்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். 46 பேரை வடக்கு போலீசார் கைது செய்தனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது.

 

The post தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்: ஏராளமானோர் கைது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,protest train ,Union government ,Chennai ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசின் நிதி தொகுப்பில்...