×

பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய பாஜ பிரமுகரிடம் விசாரணை

திருவெண்ணெய் நல்லூர்: புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி வீசிய பாஜ பிரமுகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் திருவெண்ணெய் நல்லூர் தாலுகா அரசூர் மற்றும் இருவேல்பட்டு கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட மக்கள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசாரும், வருவாய்த்துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்கு வந்த உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணனிடம் தங்களது பகுதியில் அனைத்து கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்ய வேண்டுமெனவும் கூறி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எஸ்பி தீபக் சிவாஜ், திருவாரூர் எஸ்பி ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர் வந்து அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

தகவலறிந்து அமைச்சர் பொன்முடி விழுப்புரத்திலிருந்து அரசூர் நோக்கி சென்றார். அப்போது வழியில் இருவேல்பட்டு கிராம மக்கள் அமைச்சரிடம் தங்கள் கிராமத்தையும் பார்வையிடும்படி கோரிக்கை வைத்தனர். அப்போது பாஜவைச் சேர்ந்த சிலர் அமைச்சர் மீது சேற்றை திடீரென வாரி வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் அதிகாரிகள், அமைச்சரை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வெள்ளத்தால் சேதமடைந்த மற்றொரு இடத்தை பார்வையிட பொன்முடி சென்றார். இதனிடையே சேற்றை வாரி வீசிய இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஜ பிரமுகர் ராமர் (எ) ராமகிருஷ்ணனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவரது சித்தி விஜயராணி பாஜ நிர்வாகி என்பதால், அவரது தூண்டுதலின்பேரில் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

The post பாதிப்புகளை பார்வையிட சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய பாஜ பிரமுகரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : BJP ,Minister ,Ponmudi ,Thiruvenney Nallur ,Villupuram district ,Benjal ,taluk ,Arasur ,Dinakaran ,
× RELATED தேவேந்திர பட்னவிஸை மராட்டிய மாநில...