×

நாளை கடைசி நாள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முதலமைச்சரால் 15.8.2024 சுதந்திர தினவிழா உரையில், பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என அறிவித்தார். முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள B.Pharm /D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ள தொழில்முனைவோர் 30.11.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தொழில்முனைவோரின் நலன் கருதி 5.12.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவ காசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில்முனைவோருக்கு மானியமாக ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்படும்.

கூடுதல் நிதி தேவைப்படும் நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன்பெற வழிவகை செய்யப்படும். TABCEDCO, THADCO மற்றும் TAMCO பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சியளித்து முதல் தவணை மானிய தொகை ரூ.1.50 லட்சம் விடுவிக்கப்படும். முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட பிறகு இறுதி கட்ட மானியமாக ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மருந்துகள் வழங்கப்படும். விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நாளை கடைசி நாள் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கூட்டுறவு இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Joint Registrar ,Kanchipuram Zonal Co-operative ,Independence Day ,Chief Minister of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர்...