- சாத்தனூர் அணை
- அமைச்சர் துரைமுருகன்
- எடப்பாடி
- சென்னை
- நீர் வளங்கள்
- அமைச்சர்
- Duraimurugan
- திருவண்ணாமலை மாவட்டம்
- தின மலர்
சென்னை: சாத்தனூர் அணையிலிருந்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பின்னரே நீர் திறக்கப்பட்டது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல், திடீரென விநாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது. பெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
அணையின் முழு கொள்ளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து, அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வந்த தண்ணீர், தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களைப் பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். முன் கூட்டியே 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன.
சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119.0 அடியில் 110 அடியை 25.10.2024 அன்று எட்டியதை தொடர்ந்து முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
பெஞ்சல் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மொத்தமாக 170.60 செ.மீ மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து 19500 கன அடி வீதம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் சாத்தனூர் அணைக்கு 1ம் ேததி 8 மணியளவில் 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் 11.50 மணியளவில் 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சாத்தனூர் அணை பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்து கொண்டு இருந்ததால் 1ம் தேதி 10 மணியளவில் 4ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 11 மணியளவில் 32000 கன அடி, 2ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் 63000 கன அடி, அதிகாலை 1 மணியளவில் 106000 கன அடி நீர்வரத்து வந்த வண்ணம் அதே அளவு வெளியேற்றப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து 2ம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் 5ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. வினாடிக்கு 1,80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. 5வது முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கு பிறகும் நீர் வரத்து குறையாமல் மிக அதிக அளவில் இருந்தது.
அந்த நேரத்தில் அணையில் இருந்து மிக அதிக அளவாக 1,80,000 கன அடி தண்ணீரை திறந்துவிடாமல் போயிருந்தால், ஆணைக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டு 7 டி.எம்.சி தண்ணீரும் வெளியேறியிருக்கும். அதனால் ஏற்படும் பாதிப்புகள் எல்லாம் கணக்கில் அடங்காது. ஆறாத துயரமாக அது மாறியிருக்கும். இதனையெல்லாம் புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க் கட்சிகள் மனசாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் என்றுமே விலை போகாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகு தான் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: எடப்பாடிக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி appeared first on Dinakaran.