×

தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் தனி தீவானது: சீரமைப்பு பணிகள் மும்முரம்

தர்மபுரி, டிச.3: தர்மபுரியில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் மழைநீர் சூழ்ந்ததால் தனி தீவாக மாறியது. இதையடுத்து, தேங்கிய மழை நீரை வெளியேற்றி, சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தர்மபுரி நகராட்சியின் ஒரு பகுதி மற்றும் இலக்கியம்பட்டி ஊராட்சி கடைசி எல்லையில் ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் உள்ளது. அதாவது 10, 11வது வார்டு நகராட்சியும், 3வது வார்டு இலக்கியம்பட்டி ஊராட்சியும் உள்ளன. ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகரில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் வசிக்கின்றனர். இந்த தெருக்கள் அனைத்தும் விஐபி தெருக்கள் போன்று அனைத்து வீடுகளும் மாடிவீடு கொண்ட சொகுசு பங்களாக்களாக உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு தர்மபுரி பென்னாகரம் ரோடு வழியாக வரும் முக்கிய சாலையாக உள்ளது. மற்றொரு சாலை எம்ஜிஆர் நகர் ரயில்வே குகைபாலம், பிடமனேரி ரயில்வே குகைபாலம் என 2 வழியாகவும் வரும் சாலையாக உள்ளது.

இந்நிலையில், தர்மபுரியில் கடந்த 3 நாட்களாக பெஞ்சல் புயலால் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டது. மழைநீர் செல்ல முடியாமல் குடியுறுப்பை நோக்கி திரும்பியது. மேலும் பிடமனேரி ஏரி நிரம்பி உபரிநீர் ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் பின்புறம் உள்ள கால்வாயின் வழியாக வந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், ஏரியின் உபரிநீரும் செல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியது. ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகரில் மழைநீர் சூழ்ந்தது. வெளியே இருந்து யாரும் உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. ஏஎஸ்டிசி நகரில் சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இத்தகவல் அறிந்து நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையர் சேகர் மற்றும் ஊழியர்கள் தெருக்களில் உள்ள மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர். அதன்பின் ஒரு பகுதியின் வழியாக மக்கள் செல்லும் வகையில் வழி ஏற்பட்டது.

நேரம் ஆக ஆக தண்ணீர் கொஞ்சம் கொஞ்மாக வடிய தொடங்கியது. ஆனாலும் தெருக்களில் மழைநீர் அப்படிய ஆறுபோல் ஓடுகிறது. இதனால் தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. பாம்பு, தவளை நடமாட்டம் காணப்பட்டது. ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் ஒரு தீவாக காணப்பட்டது. இக்குடியிருப்பு அருகே பென்னாகரம் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் முழுவதும் மழைநீர் சூழ்ந்து கொண்டது. இதனால் நேற்று பெட்ரோல் பங்க் இயங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து ஓய்வு பெற்ற அதிகாரி நேரு மற்றும் தெருமக்கள் கூறுகையில், ‘தர்மபுரி ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் ஒரே பகுதியில் நெருக்கமாக இருப்பதால், மழைக்காலங்களில் மூன்று குடியிருப்புகளும் பாதிக்கப்படுகின்றன.

குறிப்பாக, இந்த பெஞ்சல் புயலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளோம். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வராமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். பிடமனேரி ஏரி நிரம்பி உபரிநீர் செல்லும் கால்வாய் மேலும் அகலப்படுத்த வேண்டும். ஏஎஸ்டிசி நகர் அருகே உள்ள டிஎன்வி நகருக்கு என்று தனியாக ஒரு பெரிய கழிவுநீர் கால்வாய் அகலமாக தனியாக அமைக்க வேண்டும்,’ என்றனர்.

The post தொடர் மழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்; ஏஎஸ்டிசி நகர், ஆவின், நந்திநகர் தனி தீவானது: சீரமைப்பு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : ASTC Nagar ,Avin ,Nandinagar ,Dharmapuri ,Dharmapuri Municipality ,Dinakaran ,
× RELATED சென்னையில் 8 இடங்களில் 24 மணிநேரமும்...