×

மருதம் சிப்காட் தொழிற்சலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கும் போராட்டம்

காஞ்சிபுரம்: மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி பின்னர், கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம், விவசாயிகள் சங்கத்தினர் மனு வழங்கினர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே மருதம் கிராமத்தில் அரசின் சார்பில் தொழிற்பேட்டை அமைக்க 750 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது. மருதம் கிராமத்தில் சிப்காட் அமைந்தால் கருவேப்பம் பூண்டி, திருப்புலிவனம், புலிவாய், மருதம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 3000க்கும் மேற்பட்ட விவசாயிகளின் விளைநிலங்கள் பாழாகி வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். மேலும் ஏரி, குளம், கிணறு மற்றும் கால்வாய்களை அழிந்து நீராதாரம் பாதிக்கப்படும்.

எனவே, விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு மருதம் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, தொழிற்பேட்டை அமைப்பதை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்து கலெக்டர் அலுவலகம் அருகே ஒன்று கூடினார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம், மனு அளிக்கும் போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.

சங்க மாவட்ட தலைவர் என்.சாரங்கன், மாவட்ட செயலாளர் கே.நேரு, சங்க நிர்வாகிகள் டி.ரமணதாஸ், இ.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முயன்றனர். அப்போது, கூட்டமாக சென்று கலெக்டரிடம் மனு அளிக்க அனுமதியில்லை என விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 10 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

The post மருதம் சிப்காட் தொழிற்சலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் விவசாயிகள் மனு வழங்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Marutham Sipkot trade union ,Kanchipuram ,Marutham village ,Kalachelvi Mohan ,Uttaramerur, Kanchipuram ,Marutham Chipkot factory ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர்...