×

தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 309 ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

 

காஞ்சிபுரம்: தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 309 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 30ம்தேதி பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை பொழிவு நின்றுள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் என மொத்தம் 909 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 309 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளன.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமன் தண்டலம், இளநகர் சித்தேரி ஆகிய 36 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி ஏரி, திம்மாவரம் ஏரி, ஆத்தூர் ஏரி, வில்லியம்பாக்கம், அச்சரப்பாக்கம் ஏரி, பாக்கம் ஏரி, பிள்ளைபட்டி ஏரி, மாத்தூர் ஏரி, ஓரத்தூர் ஏரி, கடமலைபுத்தூர் ஏரி, விளங்காடு பெரிய ஏரி, உண்ணாமலை பல்லேரித்தாங்கல், பருக்கள் தாங்கல், களவேரி, பள்ளிப்பேட்டை ஏரி, அட்டுப்பட்டி கோட்டை ஏரி, புஞ்சை ஏரி, கோட்டை கரை மாம்பட்டு ஏரி, கயப்பாக்கம் கோட்டை ஏரி, சின்ன கயப்பாக்கம் ஏரி, கோட்டை கயப்பாக்கம் ஏரி, காட்டு கூடலூர் ஏரி உள்ளிட்ட 273 ஏரிகளும் என மொத்தம் 309 ஏரிகள் நிரம்பியுள்ளன.

மேலும், விவசாயத்திற்கும், நீராதரத்துக்கும் ஆதாரமாக விளங்கக்கூடிய மிகப்பெரிய ஏரிகளின் முக்கிய ஏரிகளில், தண்ணீர் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 197 ஏரிகள் 75 சதவீதமும், 51 ஏரிகள் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதமும், அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 77 ஏரிகள் 75 சதவீதமும், 142 ஏரிகள் 50 சதவீதமும், 125 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி வருகின்றன. மேலும், முக்கிய ஏரிகளான ஒன்றான உத்திரமேரூர் ஏரி 17 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெஞ்சல் புயலால் சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சேதமான நெடுஞ்சாலைகளில் பேட்ச்-ஒர்க் பணியும் நடைபெற்று வருகிறது. எனினும், நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய 5 தாலுகாவில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.

இதனால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். திருப்போரூர் தாலுகாவில் உள்ள கேளம்பாக்கத்தில் 6 மிமீ, திருக்கழுக்குன்றத்தில் 5.50 மிமீ, மதுராந்தகத்தில் 3 மிமீ, செய்யூரில் 4 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில், தற்போது பெய்து வரும் மழையால் 273 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது.

மீதமுள்ள ஏரிகள் 70 முதல் 90 சதவீதம் வரை நிரம்பி உள்ளது என்று பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரித்துள்ளனர். மேலும், ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. இவற்றில் 309 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் 274 ஏரிகள் 75 முதல் 100 சதவீதமும், 193 ஏரிகள் 50 முதல் 75 சதவீதமும், 132 ஏரிகள் 25 முதல் 50 சதவீதமும் நிரம்பி வருகின்றன என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 309 ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu ,Public Works Department ,Chennai ,Thiruvallur ,Benjal ,
× RELATED தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம்,...