×
Saravana Stores

ஓ சொல்லு மாமா… ஓகே சொல்லு மாமா… இந்தியாவிடம் அடிபணிந்த பாக். ஹைபிரிட் மாடலை ஏற்க சம்மதம்: இரு நாடுகள் மோதும் போட்டிகள் துபாயில்

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிற நாடுகளின் கிரிக்கெட் அணிகள் தந்த அழுத்தங்களை அடுத்து, வேறு வழியின்றி, சாம்பியன்ஸ் கோப்பைக்காக இந்தியா பங்கேற்கும் போட்டிகளை துபாயில் நடத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2025ம் ஆண்டு, பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

ஆனால், பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், இப்போட்டிகள் அங்கு நடந்தால் வீரர்களை அனுப்ப மாட்டோம் என்றும், இரு நாடுகளுக்கும் பொதுவாக துபாய் போன்ற இடத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டவட்டமாக கூறியது. ஆனால், அதை ஏற்க முடியாது என பிசிபி பிடிவாதம் செய்து வந்தது. இதனால் போட்டிகளுக்கான இறுதி அட்டவணையை வெளியிட முடியாமல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திணறியது.

போட்டி துவங்குவதற்கு 100 நாட்களுக்கு முன்பே, போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டு 100 நாள் கவுன்ட்டவுன் நடத்த திட்டமிட்ட ஐசிசி, அதற்கான நிகழ்ச்சியை கைவிட்டது. இதற்கிடையே, பாக். தன் பிடிவாதத்தை கைவிட வேண்டும் என ஐசிசி வலியுறுத்தி வந்தது. மேலும், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு பிற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஒருமித்த ஆதரவை அளித்தன.

இதனால் செய்வதறியாது திகைத்த பாக். கிரிக்கெட் வாரிய (பிசிபி) தலைவர் மோஷின் நக்வி, ஐக்கிய அரபு எமிரேட்சில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் முபாஷிர் உஸ்மானியை, நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்தியா கலந்து கொள்ளும் போட்டிகளை துபாயில் நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்திருக்கலாம் என தகவல்கள் கூறின.

இந்நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை இந்தியா விருப்பப்படியே இரு நாடுகளுக்கும் பொதுவான ஹைபிரிட் மாடலாக, துபாயில் நடத்த பிசிபி நேற்று ஒப்புக் கொண்டுள்ளது. அதேசமயம், எதிர்காலத்தில் இந்தியா நடத்தும் போட்டிகளையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என, ஐசிசிக்கு பிசிபி கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

The post ஓ சொல்லு மாமா… ஓகே சொல்லு மாமா… இந்தியாவிடம் அடிபணிந்த பாக். ஹைபிரிட் மாடலை ஏற்க சம்மதம்: இரு நாடுகள் மோதும் போட்டிகள் துபாயில் appeared first on Dinakaran.

Tags : Pak ,India ,Dubai ,New Delhi ,International Cricket Council ,Pakistan ,Champions Trophy ,Champions Cup ,Dinakaran ,
× RELATED பிளைண்ட் டி20 உலக கோப்பை; பாக்.கில்...