கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்துடனான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 499 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 155 ரன்களுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. நியூசிலாந்து நாட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு, நியூசி அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது.
கடந்த நவ. 28ம் தேதி துவங்கிய முதல் டெஸ்டில் முதலில் ஆடிய நியூசி. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன் எடுத்திருந்தது. நேற்று 3ம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து வீரர்கள் ஹேரி புரூக், பென் ஸ்டோக் தொடர்ந்தனர். ஹேரி புரூக் 3 சிக்சர், 15 பவுண்டரிகளுடன் 171 ரன் எடுத்து, ஹென்றி பந்தில் பிளண்டெலிடம் கேட்ச் தந்து அவுட்டானார். ஓல்லி போப் 77, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 80 ரன் குவித்தனர்.
கஸ் அட்கின்சன் 48, பைடன் கார்ஸ் அவுட்டாகாமல் 33 ரன் எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 499 ரன் குவித்தது. நியூசியின் மேட் ஹென்றி 4, நாதன் ஸ்மித் 3, டிம் சவுத்தீ 2, வில் ஓரூர்க்கி 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர், நியூசி அணி 2ம் இன்னிங்சை துவக்கினர். துவக்க வீரரும் கேப்டனுமான டாம் லாதம் 1, மற்றொரு துவக்க வீரர் டெவோன் கான்வே 8 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.
பின் வந்த, கேன் வில்லியம்சன் 61 ரன், ரச்சின் ரவீந்திரா 24, டாம் பிளண்டெல் 0, ரன் எடுத்தனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் நியூசி 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 31 ரன், நாதன் ஸ்மித் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தை விட, நியூசி 4 ரன் மட்டுமே முன்னிலை பெறறுள்ளது. கைவசம் 4 விக்கெட் மட்டுமே உள்ளன. 4ம் நாளான இன்று நியூசி அணியை சொற்ப ரன்களில் சுருட்டி வெற்றி பெறும் முனைப்புடன் இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 499 ரன் குவிப்பு: தோல்வியின் விளிம்பில் நியூசி. 2வது இன்னிங்சில் சொதப்பல் ஆட்டம் appeared first on Dinakaran.