×

நகராட்சியில் முறையாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும்

*நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ஊட்டி : ஊட்டி நகராட்சியில் முறையாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
ஊட்டி நகர மன்ற மாதந்திர கூட்டம் தலைவர் வாணீஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது. பொறியாளர் சேகரன் முன்னிலை வகித்தார். இதில், துணைத் தலைவர் ரவிக்குமார் பேசுகையில், ‘ஊட்டி நகராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகள் போடுவதை தடுக்க அப்பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி குப்பைகள் கொட்டுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து வரும் முக்கிய குடிநீர் குழாய்களில் உள்ள துணை இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும். குப்பை இல்லா திடக்கழிவு மேலாண்மையை அறிமுகம் செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சி தற்காலிக கடைகளில் மார்க்கெட்டில் நாள் தோறும் தற்காலிக கடை வைப்பவர்களுக்கு வழங்கியது போல், கடைகள் வைக்க இடம் வழங்க வேண்டும்.

ஊட்டி நகராட்சி மார்க்கெட் கட்டுமான பணிகளை வேகப்படுத்த வேண்டும். தற்காலிக மார்க்கெட்டில் முன் பகுதியில் வைக்கப்பட்ட பன்றி இறைச்சி கடைகளை வேறு பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

ஜார்ஜ் (திமுக): நகராட்சிக்கு சொந்தமான பெரிய வீடுகள் மற்றும் பங்களாக்களில் வசிக்கும் வசதியானர்களை, வெளியேற்றிவிட்டு நகராட்சி ஊழியர்களுக்கு அந்த வீடுகளை வழங்க வேண்டும். நகராட்சி குடியிருப்புகளில் உள்ளவர்களிடம் வாடகை முறையாக வசூலிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு மேலாக வளர்ச்சி பணிகளுக்கு டெண்டர் விடப்படாமல் உள்ளது.

இதனால், எந்த வார்டிலும் வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் உள்ளது. எனவே, உடனடியாக டெண்டர் விடப்பட வேண்டும். சர்ச்ஹில் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சியில் முறையாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும். மேலும், புதிய கான்டரக்டர்களுக்கு பணிகள் வழங்க வேண்டும். பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முஸ்தபா (திமுக): ஊட்டி நகராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல புதிய ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள அனுமதி கொடுங்கள். நகராட்சி கடைகளுக்கு நாங்கள் வாடகை செலுத்தி வருகிறோம். ஆனால், தற்போது வாடகை கட்டணத்திற்கு வரி வசூலித்து வருகின்றனர். இதனால், வியாபாரிகள் பாதித்துள்ளனர்.

எனவே, வாடகை கட்டணத்திற்கு வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து கழிப்பிடங்களையும் சீரமைக்க வேண்டும். அங்கு பொதுமக்களிடம் முறையான கட்டணத்தை வசூலிக்க அறிவுரை வழங்க வேண்டும். குப்பை வசூலிக்கும் திட்டம் தோல்வியடைந்துள்ளது. எனவே, குப்பை வசூலிப்பதை முறையாக மேற்கொள்ள வேண்டும்.

தம்பி இஸ்மாயில் (திமுக) காந்தல் பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் சீரமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் அகற்ற வேண்டும். செடிகளை அகற்ற வேண்டும். பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும்.

நாகமணி (திமுக) : குளிச்சோலை பகுதியில் குடிநீர் குழாய்கள் அமைத்து முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். சாலை சீரமைக்க வேண்டும். எனது வார்டில் பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரியா (திமுக): எனது வார்டில் நாய் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. அதேபோல், காட்டு பன்றி மற்றும் குதிரை, மாடு போன்ற கால்நடைகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

குமார் (அதிமுக): பாலிடெக்னிக் செல்லும் சாலையில் மாணவர்கள் நலன் கருதி நிழற்குடை அமைக்க வேண்டும். தெரு விளக்குகள் அமைக்க வேண்டும்.

அன்பு (அதிமுக): ஓல்டு ஊட்டி பகுதியில் பழுதடைந்த பாதாள சாக்கடையை சீரமைக்க வேண்டும். வார்டிற்குட்பட்ட பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும்.

அக்கீம் (அதிமுக): வார்டுகளில் முறையாக குப்பைகளை சேகரிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரஜினிகாந்த் (காங்.): விஜயநகரம் பகுதியில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க வேகத்தடைகள் அமைக்க வேண்டும். எஸ்எம் மருத்துவமனை பின்புறம் உள்ள சாலை, செல்பவுண்ட் சாலை ஆகியவைகளை சீரமைக்க வேண்டும். சுலைவான் கோர்ட் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சேரிங்கிராஸ் சாலையில் வைக்கப்பட்ட பெட்டிக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

The post நகராட்சியில் முறையாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty City Council ,Vaneeswari ,Dinakaran ,
× RELATED நிலச்சரிவால் மேலும் 3 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து