சென்னை: பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினில் தலை சிக்கி பலியான கல்லூரி மாணவியின் உடல் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தொங்கியபடி சென்றது. இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் சீனிவாசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரோசரி நர்சீசன் துரை. இவரது மகள் கேத்தரின் ஷீபா (22), வேப்பேரியில் உள்ள செயின்ட் கிறிஸ்டோபர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று காலை தனது வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே செல்வதற்காக பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் காலை 9.30 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, திருவனந்தபுரத்திலிருந்து சென்ட்ரல் நோக்கி வந்த திருவனந்தபுரம் விரைவு ரயில் அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் இன்ஜின் முன் பகுதியில் இருந்த கூர்மையான தடுப்பில் கேத்தரின் ஷீபா தலை முடியுடன் சிக்கிக்கொண்டது. இதில் சம்பவ இடத்திலேயே பலியான அவரது உடல் ரயிலின் முன் பகுதியில் தொங்கியது. அதன் பின்பு ரயிலை நிறுத்த டிரைவர் முயற்சி செய்துள்ளார். ஆனால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரம்பூர் லோகோவிலிருந்து பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையம் வரை சென்ற பிறகு ரயில் நின்றது. இதன் காரணமாக, இடைப்பட்ட தூரத்தில் அடிபட்ட கல்லூரி மாணவியின் உடல் ரயிலின் முன்பு தொங்கியபடி வந்தது.
இதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பெரம்பூர் கேரேஜ் பகுதியில் ரயில் நின்றவுடன் உடனடியாக பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் மாணவியின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பலியான கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட பெரம்பூர் லோகோ ரயில்வே நிலையத்தில் சுரங்கப்பாதை வெகு நாட்களாக மூடப்பட்டுள்ளதால் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் பலரும் கடந்து செல்கின்றனர். அவ்வாறு கடந்து சென்றதால் மாணவி ரயிலில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பூர் இருப்பு பாதை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
The post பெரம்பூரில் தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம் ரயில் இன்ஜினில் தலை சிக்கி 2 கி.மீ.க்கு தொங்கிய கல்லூரி மாணவியின் உடல்: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் appeared first on Dinakaran.