×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் முன்னாள் ஐ.ஜி. முருகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் பிடிவாரண்ட் ரத்து

* டிச.26ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை ஐஜி முருகன் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனால் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்ட் ரத்து செய்து, வரும் டிசம்பர் 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறையில் ஐஜியாக முருகன் பணியாற்றிய போது, தனக்கு கீழ் நிலையில் பணியாற்றிய பெண் எஸ்பி ஒருவருக்கு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் மீது தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனை தொடர்ந்து ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பிறகு குற்றப்பத்திரிக்கையின் தகலும் அவருக்கு வழங்கப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 10க்கும் மேற்பட்ட முறை சம்மன் அனுப்பியும் முன்னாள் ஐஜி முருகன் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். அதேநேரம் இந்த வழக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை வந்தது.

அப்போது முன்னாள் ஐஜி முருகன் நேரில் ஆஜராகாதால், மாஜிஸ்திரேட் சுல்தான் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதற்கிடையே நேற்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் ஐஜி முருகன் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அதனை தொடர்ந்து முன்னாள் ஐஜி முருகனிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானதால் அவர் மீதான கைது வாரண்ட் ரத்து செய்து மாஜிஸ்திரேட் சுல்தான் உத்தரவிட்டார்.

மேலும், வரும் டிசம்பவர் 26ம் தேதி வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஐஜி முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த முன்னாள் ஐஜி முருகன், நீதிமன்றம் முன்பு பத்திரிகையாளர்கள் அதிகமாக இருப்பது தெரிந்ததால், பின் வாசல் வழியாக வக்கீல்கள் புடைசூழ காரில் ஏறிச் சென்றார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு விவகாரம் முன்னாள் ஐ.ஜி. முருகன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானதால் பிடிவாரண்ட் ரத்து appeared first on Dinakaran.

Tags : I. G. Murugan ,SAIDAPETE COURT ,CHENNAI ,IG MURUGAN ,SAIDAPET ,COURT ,G. Murugan ,Dinakaran ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...