மகர ராசியினர் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் இந்த ராசி ஒரு மர்மமான ராசி. டிசம்பர் 22 முதல் ஜனவரி 21 வரை பிறந்தவர்கள், தை மாதம் பிறந்தோர், மகர ராசி மகர லக்கினத்தில் பிறந்து சனி ஆதிக்கத்துடன் இருப்போர் கீழ்க்காணும் பண்புகளுடன் இருப்பார்கள்.
மர்ம ராசி
மகர ராசியினரின் மனதுக்குள் இருக்கும் ரகசியங்கள் வெளியே தெரியாது. ஆங்கில அறிஞர் லிண்டா குட்மேன் மகர ராசியினரை சுவர் ஓரங்களில் வலை பின்னிக் காத்திருக்கும் சிலந்தியோடும் ஆட்களைக் கண்டால் தலையே உள்ளே இழுத்துக் கொண்டு பின்பு மெல்ல ஊர்ந்து செல்லும் ஆமையோடும் ஒப்பிடுகின்றார்.
சிலந்தி பின்னும் வலை
ஒரு சிலந்தி பறக்கும் பூச்சிகளை துரத்திச் சென்று பிடித்த தனக்கு இரையாக்கிக் கொள்ளாது, கொள்ள இயலாது. ஆனால் தந்திரமாக வலை பின்னிக் காத்திருக்கும். அந்தப் பக்கமாக செல்லும் பூச்சிகள் தாமே வந்து வலையில் சிக்கிக் கொண்டு சிலந்திக்கு உணவாகும். மகர ராசியினர் சிலந்தியைப் போல பொறுமையாகத் தன்னுடைய இருப்பிடத்திற்குள் அடைந்து கிடப்பார்கள். நல்ல நல்ல வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். அவர்கள் பின்னியிருக்கும் வலை தான் அவர்களுடைய தீர்க்கமான சிந்தனைகளும் செயல் திட்டங்களும் ஆகும். ஒரு பொருளின் மீது ஆசை ஏற்பட்டால் அதற்கு அதனை அடைய இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால் அந்த பொருள் தன்னை நாடி வந்து சேரும்படி நயமாக நாகரிகமாக நடந்து கொள்வார்கள். வந்த பின்பு தங்கள் இஷ்டப்படி ஆட்டி வைப்பார்கள். சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்ட பூச்சியின் கதை தான்.
ஆமையின் நிதானம்
மகர ராசியினர் ஆட்களைக் கண்டால் தலையை உள்ளே இழுத்துக் கொள்ளும் ஆமைகளைப் போல மக்கள் முன் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள். ஆனால் நிதானமாக நகர்ந்து சென்று போட்டிகளில் முதல் ஆளாக வெற்றி பெற்று விடுவார்கள். முயல் போன்ற மற்ற ராசியினர் தன்னை ஆமையால் வெல்லவே முடியாது என்ற உறுதியான நம்பிக்கையுடன் அலட்சியமாகவும் அசட்டையாகவும் இருந்து விடுவார்கள். அவர்கள் உறங்கும் வேளையில் மகர ராசியினர் ஆமையைப் போல எங்கும் நிற்காமல் உறங்காமல் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து ஊர்ந்து கொண்டே இருப்பர். ஒவ்வொரு நொடியும் ஓய்வு ஒழிச்சல் இன்றித் தன் இலக்கை நோக்கிப் பயணிப்பதில் மகர ராசியினர் வெற்றி வீரர்கள்.
சுய ஆய்வு (Self analysis)
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி என்ற கொள்கையில் வாழும் மகர ராசி ஆண்களும் பெண்களும் தங்களுக்கு என்று ஓர் உயர்ந்த இலக்கை நிர்ணயித்துக் கொண்டு ஒவ்வொரு நொடியும் நொடிப்பொழுதும் அந்த இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருப்பார்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு நண்பர்களுக்கு குடும்பத்தினருக்கு இவர்களின் அன்றாட வெற்றிப் பயணம் வெளியில் புலப்படாது. இலக்குக்கு இடையூறாக வரும் உலக இன்பங்களை விலக்கிவிடுவர். கடிவாளம் போட்ட குதிரையைப் போல இலக்கு நோக்கிய இன்பப் பயணம் செல்வர். தினம் தோறும் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம் என்று சுய ஆய்வு செய்வர்.
செயல்திட்பம்
ஏதேனும் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று துணிந்து விட்டால் உலகமே எதிர்த்து நின்றாலும் அதை செய்து முடிப்பார்கள். அத்தகைய வினைத்திட்பமும் செயல் திறமையும் பெற்றவர்கள். வேகத்தை விட விவேகம் மிக்கவர்கள். இவர்கள் ஒரு வேலையைச் செய்யும்போது நிதானமாக செய்வார்கள். மற்றவர்கள் அதே வேலையைச் செய்யும்போது வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்று அவசரப்படுத்துவார்கள்.
குடும்பப் பாசம்
மகர ராசியினர் குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். ஆனால் இவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது குடும்பத்தினருக்கு இவர் மீது கோபமும் ஆத்திரமும் தான் வரும். மனைவியை ராஜகுமாரி போல வைத்துத் தாங்கும் இவர்கள் அவர்களின் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றாமல் இவருக்கு பிரியமான விஷயங்களை மட்டுமே மனைவிக்குச் செய்து தருவார். அதை மனைவி மனமார பாராட்ட பலர் அறியப் பாராட்ட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். மகர ராசியினரின் பிள்ளைப் பாசம் அளவு கடந்தது. அவர்களின் வெற்றிக்காக ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டு செயல்படுவார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காக இவர்கள் அரும்பாடு பட்டு உழைப்பார்கள். ஆனால் பிள்ளைகள் உணர மாட்டார்கள். மகர ராசியினர் தம் சகோதர சகோதரிகள், பெற்றோர், மனைவி, மக்கள் மீது மிகுந்த பாசம் கொண்டு இருப்பது இவர்கள் மனதுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். இவர்கள் குடும்பத்தினரைக் கேட்டால் இவர் மீது எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் அவர்களுக்கு இருக்காது. இவரின் தியாகமும் சிந்தனையும் பிறர் உணர வாய்ப்பு இல்லை.
வெற்றியாளரே முன்னோடி
மகர ராசியினர் வெற்றியாளர்களின் வரலாற்றை அறிந்து கொண்டு, அவர்களுடைய பாதையில் எது சரி என இவர் தெரிவு செய்து அதில் பயணிக்க விரும்புவார். சாதனையாளர்களின் கதைகளை கேட்கவும் வரலாறுகளை அறியவும் ஆசைப்படுவார். சாதனையாளர்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் கொடுப்பார். இவருக்கு பிடிக்காதவர்களை முட்டாள் என்றும் முரடன் என்றும் பலரும் பேசும்படி செய்து விடுவார்.
வெற்றிப் பயணத்தில் இவர்
மகர ராசியினர் இடத்துக்குத் தக்கபடி தன்னை தகவமைத்துக் கொள்வதில் கெட்டிக்காரர்கள். இவர் தடைக்கற்களைப் படிக்கற்கள் ஆக்கினார் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர் தடைகளே வராமல் பார்த்துக் கொள்வார். தனக்கு முன்னால் பலரையும் போகவிட்டு சரியான தடம் அமைந்த பின்பு மெல்ல அவர்களுக்கிடையே ஊர்ந்து முதல் ஆளாக வந்து விடுவார். போட்டியாளர் மனம் நோகும்படி நடக்கமாட்டார். ஆனால் பலரால் இவர் மனம் நொந்து நூலாகிப் போயிருக்கும். அதற்குக் காரணம் இவருடைய தவறான கணிப்பும் சந்தேகப் புத்தியுமாகும்.
The post சிகரத்தைத் தொடும் மகரம் appeared first on Dinakaran.