×
Saravana Stores

நாம சங்கீர்த்தனத்தின் மகிமை

நாம மகிமை

குரு முதலில் என்ன செய்கிறார் எனில், நீ சாதகன். நீ அடைய வேண்டியது சாத்தியமான மோட்சம். ஞானம். ஆத்ம சாட்சாத்காரம். இதற்கு சாதனம் இது என்று மூன்றையும் சுட்டிக் காட்டுகிறார்.

ஆதிசங்கரர் விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜகோவிந்தம், ஸ்தோத்திரங்கள் என்று நிறைய சாதனங்களை காட்டுகிறார் அதில் நாமமயமாக காண்பித்தது விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம். இதன் மூலமாக பகவன் நாமாதான் சாதனம் என்று காண்பித்துக் கொடுக்கிறார்.

ராமானுஜர் விஷயத்திற்கு வரும்போது திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் போய் பதினேழுமுறை உபதேசம் வாங்குகிறார். அப்படி உபதேசம் வாங்கிய மந்திரத்தை மக்களுக்கு எளிமையாக கொடுக்கிறார். ஏனெனில் மந்திரத்திற்கு restrictions உண்டு. ஆனால், அதே மந்திரம் நாமமாக வரும்போது அதே சிவ நாமம்தான். அதே ராம நாமம்தான். அதே கிருஷ்ண நாமம்தான். மந்திரமாக இல்லாமல் நாமமாக வரும்போது restrictions இல்லை.

நாராயண மந்திரத்தை எல்லாவித restrictions னோடு வாங்கிக் கொண்டார். ஆனால், நமக்கு எந்தவிதமான restrictions இல்லாம நாமமாக ஓம் நமோ நாராயணா என்று கொடுத்து விட்டார். அவர் பதினேழு முறை சோதனை அனுபவிச்சாலும் நம்மை சோதிக்கவில்லை. நமக்கு எளிமையா எடுத்துக் கொடுத்துட்டார்.

ராம நாமம் எப்போது உருவானது என்று பார்ப்போமா?

ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதியில் நான்முகனான பிரம்மாதான் இயற்றினார். நூறு கோடி ஸ்லோகங்களை கொண்டிருந்தது. யார் கேட்பார்கள் என்கிற ஐயமும் அவரிடம் இருந்தது. சரியென்று சொல்வோமே என ராமாயண உபந்நியாசத்தை தொடங்கினார். சத்ய லோகத்தில்தான் முதலில் தொடங்கினார். சத்யலோக வாசிகளோடு வைகுண்ட வாசிகளும், கயிலாய கணங்களும் சேர்ந்து ராமாயண அமுதத்தை பருகினர். அப்போதுதான் திடீரென்று எல்லோருக்கும் ஓர் ஆசை தோன்றியது. இந்த நூறு கோடி ஸ்லோகங்களையும் நம் லோகத்திலேயே படித்து ஆனந்தமடையலாமே என்று நினைத்தனர்.

பிரம்மா ஆனந்தமுற்றாலும் நூறு கோடி ஸ்லோகங்களையும் யாருக்கென்று கொடுப்பது என்று கவலையானார். ராமாயண அமுதின் சுவை குறையாது பிரித்துக் கொடுக்கிறேன் என சிவபெருமான் முன் வந்தார். எல்லோரும் மகிழ்ந்தார்கள். நூறு கோடிகளை முப்பத்து மூன்று கோடிகளாக மூவருக்கும் கொடுத்தார். மீதியுள்ள ஒரு கோடியை முப்பத்து மூன்று லட்சங்களாக வகுத்தளித்தார். மிஞ்சிய ஒரு லட்சத்தையும் மூன்றாகப் பிரித்தார். ஆயிரம் ஸ்லோகங்கள் நின்றது. அதை முன்னூறாக பாகம் செய்ய நூறு தங்கியது. அதையும் பிரித்துக் கொடுங்கள் என்று கோரிக்கை வைக்க முப்பதாக மூவருக்கும் கொடுக்க பத்து ஸ்லோகங்கள் மிஞ்சியது. அதையும் ஏன் விடவேண்டும் என்று மூன்று லோக வாசிகளும் பிடிவாதம் செய்ய மும்மூன்றாக கொடுக்க ஒரேயொரு ஸ்லோகம் பாக்கியிருந்தது. அந்த ஸ்லோகத்தில் முப்பத்திரெண்டு எழுத்துக்கள் இருந்தன. சரி, அவர்கள் கேட்கும் முன்பு தானே கொடுத்து விடுவோம். நம் வேலை அதுதானே என்று பத்து பத்தாக மூவருக்கும் கொடுக்க இரண்டு எழுத்துக்கள் மட்டும் மலர்ந்த பூக்களாக மணம் கமழ்ந்தன.

இதை என்ன செய்வது? யாருக்கென கொடுக்க முடியும்? மூவரும் விட்டுக் கொடுக்க மறுக்கிறார்களே என்று யோசித்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து அந்த இரண்டு எழுத்துக்களுமே பங்கு பிரித்தவருக்கு போய் சேரட்டும் என்று முழு மனதாக கொடுத்தார்கள். ஈசனும் ஆனந்தமாக, இருதயப் பூர்வமாக, பிரேமையோடு அந்த இரண்டு எழுத்துக்களை எடுத்துக் கொண்டார். அந்த இரண்டு எழுத்துக்களும் எவை தெரியுமா? அதுதான் ராம எனும் நாமம். தாரக மந்திரம். ஒட்டுமொத்த ராமாயணத்தின் இருதய ஸ்தானம்.

ஆஹா… கிடைத்து விட்டதே என தானே வைத்துக் கொள்ளாது அந்த கருணாமூர்த்தி காசித் தலத்தில் வந்தமர்ந்தார். கங்கா நதி தீரத்தில் அமர்ந்து ராம நாமத்தை பூஜித்தபடி கிடந்தார். காசியில் வந்து மரிப்போரின் செவியில் தாமே சென்று ராம எனும் அந்த தாரக மந்திரத்தை ஓதி பிறவாமை எனும் முக்தி பதத்தை அடையச் செய்தார். நமது தென்னாட்டிலும் கூட தட்சிண காசி, விருத்த காசி எனும் க்ஷேத்திரம் உண்டு. அதை விருத்தாசலம் என்று அழைப்பார்கள். அத்தலத்தில் மரிப்பவர்களின் ஆவி பிரியும்போது விருத்தாம்பிகை அவர்களை தம் மடியில் கிடத்தி புடவைத் தலைப்பினால் விசிறி மரணவலி இல்லாமல் செய்ய, விருத்தகிரீஸ்வரர் அவர் களின் காதில் ராம எனும் மந்திரத்தை ஓதி மோட்சத்தை கிடைக்கச் செய்கிறார்.

ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடைய ஒவ்வொரு மார்க்கங்கள் இருந்தன. யாகத்தினால் ஒரு யுகத்தினால், கடுமையான தவத்தினால் வேறொரு யுகத்திலும், யம, நியம, ஆசனம் மற்றும் அர்ச்சனையால் ஒரு யுகத்திலும் இறைவனை அடையலாம் என்று வகுத்து வைத்திருந்தார்கள். ஆனால், கலியுகத்தில் மட்டும் எந்தவொரு கடுமையான சாதனைகளும் செய்ய முடியாத சூழல் இருக்கும் என்பதையும் அன்றே அறிந்து வைத்திருந்தனர். அதனாலேயே மிக எளிய மார்க்கமான யாவரும் பின்பற்றும்படியான ஒரு மார்க்கத்தை பாகவதம் முதலான புராணங்களும், நாரதர், ஆஞ்சநேயசுவாமி, வியாசர் என்று மகரிஷிகள் உபதேசித்தனர். அந்த அற்புதமான மார்க்கமே நாம சங்கீர்த்தனம். நாம ஸ்மரணம் எனும் நாமத்தை மட்டும் ஜெபித்தலாகும். அதற்காக கலியுகத்தில் ஆசாரமாகவும் ஒழுக்கமாகவும் இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட ஒழுக்கமான நியதிகளையும் இந்த நாம ஜெபம் தானாகக் கொடுக்கும் என்றார்கள். இப்படிப்பட்ட நாம ஜெப வேள்விகளை பாரதம் முழுவதும் பல்வேறு பாகவத உத்தமர்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.

கேரளாவிலுள்ள கஞ்சன்காடு என்கிற தலத்தில் வசித்த ஞானியான பப்பா ராமதாஸ் என்பவர் திருவண்ணாமலையிலுள்ள யோகிராம்சுரத்குமாருக்கு அளித்தது திரயோதசாக்ஷரி என்கிற ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் என்கிற மந்திரமாகும்.

ராமானுஜர் எப்படி நமக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை – ஓம் நமோ நாராயணா என்கிற நாமாவாக அளித்தாரோ அதேபோல புத கௌசிக ரிஷிக்கு கனவில் வந்து சிவபெருமான் ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தையும், ராம ரக்ஷா மந்திரத்தையும் உபதேசம் செய்தார். அந்த ராம ரக்ஷா மந்திரம்தான் திரயோதசாக்ஷரி என்கிற ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் மந்திரம்.

ஓம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய்ஜெய் ராம் என்கிற இந்த மந்திரத்தை புத கௌசிக ரிஷி வாங்கி அப்படியே பரம்பரையாக வந்து பப்பா ராம்தாஸுக்கு வந்து அவரிடமிருந்து யோகிராம்சுரத்குமார் அவர்களுக்கு வந்து அவரை உபதேசமும் செய்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் யோகிராம்சுரத்குமார் எனும் தன் நாமத்தைப் பற்றி சொல்லும்போது இது என் தந்தையின் நாமமாகும்… அந்த தந்தையே ராமராகும் என்கிறார்.

மத்வ சம்பிரதாயத்தில் த்வாதச ஸ்தோத்திரம் என்று இருக்கிறது. மற்ற எல்லாவற்றிலும் ராம நாமம் கிருஷ்ண நாமம் என்று எல்லாமே இருக்கிறது. உபநிஷதங்களில் கலிசந்தரணோ உபநிஷதம் என்று ஒன்று உண்டு. கலி சந்தரணம் என்றால் கலியை நல்லபடியாக தாண்டுவது. கலியுகம் என்கிற இந்த கலியை நல்லபடியாக தாண்டிப் போக வைப்பது. இது நம்மை கரை சேர்க்கக் கூடிய மகாமந்திரம் என்று நமக்குச் சொல்கிறது. அந்த மந்திரம் என்னவெனில்

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

அதனால் நாம சங்கீர்த்தனம் என்பதும், நாம உச்சாடணம் என்பதும் உபநிஷத பிரமாணத்தோடு சொல்லப்படுவது. அதையே குரு அருள்கிறார்.

The post நாம சங்கீர்த்தனத்தின் மகிமை appeared first on Dinakaran.

Tags : ADISANKARAR ,VISHNU SAHASRANAM ,BAJAGOVINDAM ,Nama ,Dinakaran ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்