×
Saravana Stores

சகோதர கருத்து வேறுபாடு எப்படி வரும்? என்ன செய்தால் போகும்?

ஆன்மிகத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜோதிடத்தைப் புரிந்து கொள்வதோ ஜோதிடத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதோ எளிதான காரியம் அல்ல. இன்றைக்கு ஜோதிடம் என்பதை தற்காலிக நிவாரணம் அல்லது பரிகாரம் என்ற கோணத்தில் மட்டும் பார்க்கிறார்கள். இதனால் எந்தப் பலனும் இல்லை.

ஒரு சின்ன உதாரணத்தைச் சொல்லுகின்றேன். இப்பொழுது சர்க்கரை வியாதி எல்லா இடங்களிலும் இருக்கிறது சரி இந்த சர்க்கரை வியாதி நமக்கு உண்டா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு இரண்டு வழிகள் உண்டு.

நம்முடைய ரத்தத்தை பரிசோதனை செய்து சர்க்கரை வியாதி எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். (இது ஜாதகம் பார்த்து தெரிந்துகொள்வது போல).

இரண்டாவதாக சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு என்று சில அடையாளங்களை மருத்துவர்கள் சொல்லுகின்றார்கள். அதை வைத்துக்கொண்டு நமக்கு சர்க்கரை வியாதி இருக்கலாம் என்று யூகிக்கலாம். உதாரணமாக அடிக்கடி பசி எடுத்தல், திடீரென்று கை, கால்கள் வலி, பாதம் ஊசி போல் குத்துதல், வியர்த்துபோதல், திடீர்பசி, மயக்கம், (தாழ்நிலை சர்க்கரை), காயம் ஏற்பட்டு ஆறாமல் இருத்தல், எப்பொழுதும் சுறுசுறுப்பு இல்லாமல் மத மத என்று இருத்தல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல் இப்படிப் பல காரணங்களைச் சொல்கிறார்கள்.

மருத்துவரிடம் சென்றால் முதலில் சர்க்கரை வியாதி இருக்கிறதா? என்று சோதிக்கச் சொல்லுகின்றார் காரணம் சர்க்கரை வியாதியால் மட்டும் இப்படிப்பட்ட அடையாளங்கள் வர வேண்டும் என்று இல்லை வேறு வியாதியாகவும் இருக்கலாம். அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நாம் மருத்துவரிடம் சென்று ஆலோசித்து சர்க்கரை வியாதி உண்டா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள சோதனை கூடத்தில் ரத்த பரிசோதனை செய்துகொள்கிறோம்.
இப்பொழுது சர்க்கரை வியாதி உறுதியாகிவிட்டது.

சர்க்கரை வியாதியை போ என்றால் போகாது. அதனுடைய வேலையைக் காட்டிக்கொண்டு தான் இருக்கும். அடுத்து சிகிச்சை முறை தான். இப்பொழுது அதற்கு ஏதேனும் ஒரு சிகிச்சை முறை தொடர வேண்டும். அலோபதி, ஹோமியோபதி, அல்லது சித்த வைத்தியம் என்று பல இருக்கிறது. (அதுதான் பரிகாரங்கள்).

வியாதியைக் கூடக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் பரிகாரங்கள். அதை எத்தனை விதமாக, எவ்வளவு செலவு வைக்கும்படிசொல்கிறார்கள்.? இதில் தான் கவனம் அதிகம் தேவை. வியாதிக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை விட தவறான மருந்து ஆபத்தை உண்டாக்கி விடும்.

சரி… சர்க்கரை வியாதிக்கு என்ன செய்யலாம்? நீங்கள் இதை குறித்துச் சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். சிலர், வெந்தயம் சாப்பிடு என்பார்கள். சிலர் முருங்கை இலை சாப்பிடு என்பார்கள். சிலர் பன்னீர் பூ ஊற வைத்து சாப்பிடு என்பார்கள். சிலர் யோகா செய் என்பார்கள்.சிலர் அரிசிச்சோறே சாப்பிடாதே என்பார்கள்.

ஆனால் வைத்திய சாஸ்திரத்தில் இதற்கென்று உலகளாவிய முறையும் மருந்தும் இருக்கிறது. ஜோதிட சாத்திரத்தில் இல்லை. இதுதான் சரி என்று அவரவர் சொல்வதாகவே பெரும்பாலும் இருக்கும். நாம் அங்கீகாரம் பெற்ற வைத்திய நிபுணரிடம் சென்றால்தான் முடியும். சர்க்கரை வியாதியைச் சமாளித்துக்கொள்ள மருத்துவர் பல பரிகாரங்களைப் பரிந்துரைக்கிறார்.

உணவை கட்டுப்பாட்டுடன் எடுத்துக் கொள்ளுங்கள் ஒரே நேரத்தில் அதிக உணவு சாப்பிட வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும் தினம் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சி செய்யவும் யோகா செய்யவும் தியானம் செய்யவும் மனத்தை அமைதியுடன் வைத்திருக்கவும். வேளா வேளைக்கு மருந்து மாத்திரைகளை முறையாகச் சாப்பிடவும்.

இப்படி ஒரு பட்டியல் மருத்துவர் கொடுப்பார். இதன் பிரகாரம் நடந்து கொண்டால் சர்க்கரை வியாதியை சமாளித்துக் கொள்ளலாம். நன்றாக கவனிக் கவும். சர்க்கரை வியாதி போய்விடாது, ஆனால் கட்டுக்குள் இருக்கும். அதனால் ஏற்படும் தொல்லைகள் குறையும். இதை அப்படியே ஜாதக பலனுக்குக் கொண்டு வாருங்கள்.

இப்பொழுது நமக்கு சகோதர உறவு சரியில்லை. ஏதோ கருத்து வேறுபாடு. இப்பொழுது அவருடைய ஜாதகத்தில் மூன்றாம் இடத்தையும் செவ்வாயின் நிலையையும், மூன்றாம் இடத்துக்கு உரியவனின் நிலையையும், நடைபெறுகின்ற தசாபுத்தி அமைப்பையும், கோள்சார நிலையையும் வைத்துக்கொண்டு, இந்த சகோதர கருத்து வேறுபாடு உண்மையில் இருக்கிறதா? எந்த அளவுக்கு இருக்கிறது? என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சகோதர கருத்து வேறுபாடு இருப்பது நடைமுறையில் தெரிகிறது? அதிகப் பசி எடுப்பதை வைத்துக் கொண்டு சர்க்கரை வியாதி இருக்கலாமா என்று நினைப்பது போல அண்ணன் தம்பி கருத்து வேறுபாடு வைத்துக்கொண்டு சகோதர உறவின் நிலையை புரிந்துகொள்ளலாம்.

பரிசோதனைக் கூடத்தில் நோய் தன்மை உறுதிப்படுவது போல ஜாதகத்தைப் பார்க்கும்பொழுது, இது ஜாதக ரீதியான ஒரு தோஷமா, எத்தனை காலம் இருக்கும், நிரந்தரமானதா, மாறுபாடு உடையதா, என்பதைத் தெரிந்து கொள்ளலாம். காரணம் சில ஜாதகங்களில் அடிப்படை அமைப்பே, சகோதர உறவு இல்லாதது போல் இருக்கும்.

சகோதரர் இருக்க மாட்டார். இருந்தாலும் பயன்படாத மாதிரி இருக்கும். பிறவிச் செவ்வாயும் 3 ம் இடமாகிய சகோதர ஸ்தானமும் மிகுந்த பலவீனமாக இருக்கும். மூன்றாம் இடத்ததிபதி அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பார். அதோடு நடைபெறும் அடுத்தடுத்த தசா புத்திகளும் இந்த மூன்றாம் இடத்திற்கும் செவ்வாய்க்கும் எதிர் நிலையில் இருக்கும். வருகின்ற தசாபுத்தி காலமும் அப்படியே இருந்தால் இதை ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.

ஆனால் சில குடும்பங்களில் ஆரம்பத்தில் சகோதரர்கள் நன்றாகவே இருப்பார்கள் ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பார்கள் திடீரென்று ஒரு சின்ன பிரச்னை வந்து அந்த சகோதர பாசம் கேள்விக் குரியதாக மாறிவிடும் ஒருவருக்கொருவர் வெட்டலாம் குத்தலாம் என்ற அளவுக்கு எதிர் எதிராக நிற்பார்கள்.

ஆனால் ஜாதகம் பார்ப்பதன் மூலமாக இதற்கு ஒரு தீர்வை சிந்திக்கலாம். இது தற்காலிக தசா புத்தியின் அடிப்படையில் இருப்பதாகக் கருதினால், அது என்றைக்கு முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதுவரை விட்டுக்கொடுத்து, பிரச்னையை சிக்கலாக்கிவிடாமல், பொறுமையோடு இருக்கும் படி பரிந்துரைக்கலாம். செவ்வாயைப் பலப்படுத்த சாஸ்திர ரீதியாக உள்ள மாந்திரீக, அல்லது தாந்த்ரீக முறைகளைச் சொல்லலாம்.

செவ்வாய்க்கிழமை விரதமிருந்து, செண்பகமலர் கொண்டு அர்ச்சனை செய்யலாம். துவரை தானம் செய்யலாம். அங்காரக அதிதேவதையான முருகனுக்கு அபிஷேக ஆராதனை செய்யலாம். இரத்த தானம் செய்யலாம். இப்படிச் செய்தால், தோஷம் விலகும். சகோதரர்கள் எப்படிப் பிரிந்தார்களோ அதைப்போலவே ஏதோ ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு மறுபடி இணைந்து விடுவதையும் நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.

இந்த ரகசியங்களையும் தகுந்த பரிகாரங்களையும் தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதற்காகத்தான் ஜாதகம் பார்க்க வேண்டுமே தவிர வேறு ஒன்றுக்கும் அல்ல.

The post சகோதர கருத்து வேறுபாடு எப்படி வரும்? என்ன செய்தால் போகும்? appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெளிவு பெறு ஓம்