×
Saravana Stores

திருமால் வழிபட்ட‘பொன்னார் மேனியன்’

‘சான்றோர் உடைத்து’ என்ற சிறப்பினை உடைய தொண்டை நாட்டின் திலகம் எனப் போற்றப்படும் காஞ்சிபுரம் அருகில் இரு சிவாலயங்கள், திருமால் வழிபட்ட பெருமையுடன் திகழ்கின்றது. ஒன்று “திருமாற்பேறு’’ என்னும் திருமால்பூர் (தேவாரப் பாடல்பெற்ற தலம்), மற்றொன்று “திருமாதலம்பாக்கம்’’. இதில் திருமாதலம்பாக்கம் சிறப்பினைக் காண்போம்.

தல சிறப்பு: உலக உயிர்களைக் காத்து வரும் வல்லமை மிகுந்த திடசக்தியைப் பெற்றிட திருமால் இத்தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது. திருமால் இங்கு விரும்பி வந்து உறையும் தலம் என்ற பொருள்பட, திருமாதலம்பாக்கம் (திருமால் + தலம் + பாக்கம்) என்று வழங்கப்படலாயிற்று.

மூலவர் சிறப்பு: சிவபெருமான் செந்நிறம் கொண்டவர். ‘பொன்னார் மேனியனே’ என்று சுந்தரர் தேவாரம் கூறும். இத்தல இறைவன் திருமாலீஸ்வரர் என்ற திருநாமங்கொண்டு பொன்னிறமாகக் காட்சி தருவது சிறப்பு. மிக நீண்ட பாணம், சதுர ஆவுடையார் கொண்ட லிங்க ரூபம். காண அரிய காட்சி.

திருமால் திருமேனி: வெளிப்பிரகாரத்தில் ஈஸ்வரனை நோக்கி அபயவரத ஹஸ்தத்துடன், சங்கு சக்ரதாரியாய் மிக சௌந்தர்யத்துடன் தனிச் சந்நதி கொண்டு அருள்கிறார். பச்சைக்கல் (மரகதக்கல்) திருமேனி. இவரது திருமேனியில் செய்யும் பால் அபிஷேகமானது நீல நிறமாக தென்படுவதைக் காணலாம்.

இதர சந்நதிகள் சிறப்பு: அம்பாளின் திருநாமம் திரிபுரசுந்தரி. பெயருக்கேற்றாற்போல் காட்சியளிக்கின்றாள். எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதில், நந்தி பிரதிஷ்டையாகியுள்ளது. ஒரு தனிப்பட்ட சிறப்பு என்னவெனில் ஒரு சில தலங்களில் மட்டுமே இதுபோன்ற அமைப்பினைக் காணலாம். கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேஸ்வரர் சந்நதி, நவக்கிரக சந்நதி, சூரிய சந்திரர்கள், கொடி மரம், வில்வ மர தல விருட்சம், புஷ்கரணி (திருக்குளம்)உற்சவ மண்டபம், சோழர்கள் காலத்து சப்தமாதர்கள் என அனைத்து அம்சங்களுடன் ஒரு பரிபூர்ண சிவாலயமாகத் திகழ்கின்றது. முழுவதும் கருங்கல் திருப்பணியால் ஆன ஆலயம். மதில் மேல் நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு: ஒரு சிவாலயத்திற்கு உரிய அனைத்து வழிபாடுகளும் ஆகம முறைப்படி நடத்தப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் மூன்று நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் பௌர்ணமி உச்சிகால பூஜை சிறப்பாகப் பேசப்படுகிறது.

பரிகாரச் சிறப்பு: இத்தலத்திற்கு வந்து ஈசன், அம்பாளை, திருமாலை வணங்கி அர்ச்சித்து 11 முறை ஆலயத்தை வலம் வந்தால், நமது மனக்கவலைகள் நீங்கி, பிரார்த்தனைகள் நிறைவேறுவதாக பக்தர்கள் அனுபவ ரீதியாகத் தெரிவிக்கின்றனர். தூக்கத்தில்கூட துக்கம் வராது. மன திடம் கிட்டும், சிவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், சாயுஜ்ய பேறு (இறை தரிசனம் கிட்டும் என்றும், திருமாலுக்கு தொடர்ந்து 11 ஏகாதசி அல்லது 11 சனிக் கிழமைகளில் அபிஷேகம் செய்து, அபிஷேக பாலை அருந்த சரீர நோய்கள், சரம வியாதி நிவர்த்தியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: 9894342409 மற்றும் 9788770879.

தல இருப்பிடம்: அரக்கோணத்திற்கு தெற்கே தக்கோலத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருமாதலம்பாக்கம் (தற்போது ராணிப்பேட்டை மாவட்டம்).

The post திருமால் வழிபட்ட‘பொன்னார் மேனியன்’ appeared first on Dinakaran.

Tags : Ponnar Manion ,Tirumal ,Thontai ,Chandor Uttu ,Kanchipuram ,Thirumal ,Thirumaperu ,Tirumalpur ,Thirumathalambakkam ,Thirumadalambakkam ,
× RELATED புதுமாப்பிள்ளை ரயிலில் சிக்கி பலி...