×

மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி மீனவர் குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி கடலில் இறங்கி திடீரென மீனவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் இசிஆர் சாலையொட்டி நெம்மேலி குப்பம் அமைந்துள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள், முழுக்க முழுக்க மீன்பிடி தொழிலை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர். இங்கு, பல மாதங்களாக கடல் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டு வருகிறது. இதனால், திடீர் திடிரென கடலில் ராட்சத அலை எழும்பி பல அடி தூரத்திற்கு குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு, சிமென்ட் சாலையில் விரிசல் ஏற்பட்டு இடிந்தது. நெம்மேலி குப்பத்துக்கு அருகே சூளேரிக்காடு என்ற பகுதியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைந்துள்ளது.

இந்த, ஆலைக்கு கடலில் இருந்து கடல் நீர் எடுத்து வருவதற்காக ராட்சத குழாய்கள் அமைக்க பல அடி தூரத்திற்கு பாறாங்கற்கள் கொட்டப்பட்டது. இந்த கற்களால் அருகில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்த, ராட்சத அலையின் தாக்கத்தால் கடல் பல அடி தூரத்திற்கு முன்னோக்கி வந்து விட்டது. இதனால், மீனவர்கள், தங்களது படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் கரையில் நிறுத்தி வைக்கும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து கரை ஒதுங்குவது தொடர் கதையாக உள்ளது. கடந்த மாதம் கடற்கரையொட்டி உள்ள வெங்கடம்மன் கோயில் முன் மண்டபம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக அரசுக்கும், மீன்வள துறை அதிகாரிகளுக்கும் பல ஆண்டுகளாக தூண்டில் வளைவு அமைத்து தர கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று கடந்தாண்டு தூண்டில் வளைவு, மீன் இறங்குதளம் மற்றும் வலை பின்னும் கூடம் அமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

ஓராண்டை கடந்தும் இன்னும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கபடாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை, தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் கடற்கரையொட்டி உள்ள வெங்கடம்மன் கோயில் முன்பு திடீரென கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், நெம்மேலியில் தூண்டில் வளைவு அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை – புதுச்சேரி இசிஆர் சாலையை மறித்து மிகப் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

The post மாமல்லபுரம் அருகே நெம்மேலி குப்பத்தில் தூண்டில் வளைவு அமைக்க கோரி கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nemmeli Kuppam ,Mamallapuram ,Nemmeli ,ECR road ,Chennai ,
× RELATED மாமல்லபுரம் அருகே நெம்மேலி...