×
Saravana Stores

சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை; நடிகர் விஜய் தோல்வியை சந்திப்பார் : அமைச்சர் ரகுபதி பேச்சு

புதுக்கோட்டை : யாரும் யாரோடு கூட்டணி சேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கூட்டணி ஸ்ட்ராங்காக இருக்கிறது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,”சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை; அப்படி யாரேனும் சொன்னால் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். நடிகர் விஜய் எம்ஜிஆர் பாணியை பின்பற்றப் பார்க்கிறார்; அது ஒருபோதும் நடக்காது; எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது. திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்துப் போகும். அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தோல்வியைத்தான் சந்திப்பார்.

அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏற்கனவே ஊழல் பட்டியலை எல்லாம் அண்ணாமலை கொடுத்திருந்தார் அது புஷ்வானமாகிவிட்டது. அதைப்போல் தவெக தயாரிக்கும் ஊழல் பட்டியலால் எந்தவித பலனும் பயனும் கிடைக்கப்போவதில்லை. 2024 தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முடியாமல் போனதை போல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமியால் கூட்டணி அமைக்க முடியாது,”என்று தெரிவித்தார். இதனிடையே நெல்லையில் நேற்று கட்சி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக பேசிய சீமான், ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வாதிகாரம் இல்லாது எந்த செயலையும் சரி செய்ய முடியாது எனப்பேசியிருந்தார். சீமானை மறைமுகமாக குறிப்பிட்ட ரகுபதி, சர்வாதிகாரிகளுக்கு இடமில்லை என்று விமர்சித்துள்ளார்.

The post சர்வாதிகாரிகளுக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இல்லை; நடிகர் விஜய் தோல்வியை சந்திப்பார் : அமைச்சர் ரகுபதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vijay ,Minister ,Ragupathi ,Pudukkottai ,Ragupati ,Pudukkotta ,
× RELATED வருகிற சட்டமன்ற தேர்தலில்...