- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஐரோப்பிய ஒன்றிய
- 16வது நிதி ஆணையம்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- தமிழ்
- தமிழ்நாடு
- தின மலர்
சென்னை: ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கக் கூடிய வரி வருவாய் பங்கினை தமிழ்நாட்டிற்கு 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை வழங்கும் வகையில் நிதிப்பகிர்வு முறையானதாகவும், ஏற்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும் என்றும் 16வது நிதிக்குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில், நிதிப் பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும் என்றும் முதல்வர் கூறினார். 16வது நிதி ஆணையத் தலைவர் அர்விந்த் பனகாரியா தலைமையிலான குழுவினர், 4 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் அவர்கள் தங்கி ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் வரி வருவாயில் தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு சதவீதம் குறித்து மத்திய நிதி ஆணையக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10 மணிக்கு சென்னையில், அவர்கள் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும் 16வது நிதிக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். புகழ் பெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர் அரவிந்த் பனகாரியாவின் சீரிய தலைமையின் கீழ் அமைக்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்திருக்கும் 16வது நிதிக்குழுவின் பரிந்துரைகள், பரந்து விரிந்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவு செய்து இந்தியாவை உலகின் பொருளாதார வல்லரசு நாடாக மாற்றும் வகையில் அமைந்திடும் என்று நான் நம்புகிறேன். ஒன்றிய அரசிற்கும் பல்வேறு மாநில அரசுகளுக்கும் இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் பொறுப்புகளை இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கனவே வரையறுத்தி தந்திருக்கிறது. அத்தகைய வழிகாட்டுதலின்படி நாம் கடைப்பிடித்துவரும் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தமது மாநிலங்களின் உரிய தேவைகளை நிறைவேற்றுவதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் உரிய பங்காற்றி வருகின்றன. எனினும், சுகாதாரம், கல்வி, சமூகநலம் மற்றும் வேளாண்மை போன்ற துறைகளின் முன்னேற்றத்திற்கான பல முக்கியமான திட்டங்களை வடிவமைத்து நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புகளை பெரும்பாலும் மாநில அரசுகள்தான் நிறைவேற்றி வருகின்றன. ஆனால், அதற்கு மாறாக இந்த பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்ற தேவையான வருவாயை பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.
அந்தவகையில், கடந்த 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடிய வரி வருவாய் பங்கினை 41 சதவீதமாக உயர்த்தியதை நாங்கள் உளமார பாராட்டுகிறோம். எனினும் இந்த பரிந்துரைக்கு மாறாக கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கான வரிப் பகிர்வில் இடம்பெற்றிருக்கும் மேல் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை ஒன்றிய அரசு இக்கால கட்டத்தில் பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதுமட்டுமின்றி, ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை தொடர்ந்து உயர்ந்து வருவதும், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் நிதி நிலையை மேலும் பாதிக்கின்றது. ஒருபுறம் ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய வரிப் பகிர்வு குறைவதால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி என இரண்டுமே மாநில அரசுகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. எனவே, ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாகவும், அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு 50 விழுக்காடு பங்கீடு வழங்கப்பட்டால் மட்டுமே மாநிலங்கள் தங்களுடைய தேவைகளுக்கேற்ப வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நிதி மேலாண்மையில் உரிய சுயாட்சியுடன் செயல்பட இயலும். எனவே, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களுக்கு உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள் வாயிலாக ஒரு உச்சவரம்பை இந்த நிதிக்குழு பரிந்துரைத்து, மாநில அரசுகளுக்கான 50 சதவீதம் வரிப்பகிர்வை உறுதி செய்திடும் என்று நான் நம்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையேயான வரிப்பகிர்வினை முறைப்படுத்துவதில் சமச்சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது. 9வது நிதிக்குழு பரிந்துரைத்த 7.931 சதவீதத்தில் இருந்து கடந்த 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 4.079 சதவீதமாக தமிழ்நாட்டிற்கான வரி பகிர்வு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்துள்ளது. நாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல முன்னோடி நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, செம்மையான நிர்வாகத்தை தொடர்ந்து நல்கி வரும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை தொய்வடையச் செய்து தண்டிப்பதை போல தற்போதைய வரிப் பகிர்வு முறை அமைந்துள்ளது. எனவே, சமச்சீரான வளர்ச்சியையும், திறமையான நிர்வாகத்தையும் இந்த வரிப் பகிர்வு முறையில் சமக்குறிகோள்களாக கருதி இந்த நிதிக்குழு தனது பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம். நாட்டின் சமச்சீரான வளர்ச்சியை எதிர்நோக்கும் வகையில் வளர்ச்சி குன்றிய பகுதிகளுக்கு தேவையான நிதியை வழங்குவது அவசியம் என்றாலும் அதே வேளையில், பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை அளிப்பதன் மூலமாகவே அவற்றின் வளர்ச்சியை தக்கவைப்பதுடன் அந்த மாநிலங்களின் வளர்ச்சி பாதைக்கும் வழிவகுக்க முடியும் என்பதையும் நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டும். சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை குறைத்து வளர்ச்சியை எதிர்நோக்கும் பகுதிகளுக்கு நிதி ஆதாரங்களை மடைமாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு இறுதியாக கிடைக்கும் வரிப்பகிர்வும் குறைந்துவிடும் என்பதே உண்மை.குறுகிய காலக் கண்ணோட்டத்தோடு செயற்கையாக உருவாக்கப்படும் நிதி மறுபகிர்வுமுறை எதிர்காலத்தில் எதிர்பார்த்த பலன்களை தராது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு சிறந்த நிர்வாக அமைப்புடன் திறம்பட செயலாற்றி வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தொடர்ந்து வளர்ச்சி அடையும் வகையில் நிதிப் பகிர்வு முறையை மாற்றுவதன் மூலம் இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் பெரும் பங்களிப்பு செய்திட முடியும்.
முந்தைய நிதிக் குழுக்களின் பரிந்துரைகளை கவனமாக ஆராய்ந்து பார்க்கும்போது, கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கியபோதும், பல மாநிலங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த 45 ஆண்டுகளாக நம் நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறையின் மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது. எனவே, 16வது நிதிக்குழு இத்தகைய அணுகுமுறையை மறுபரிசீலனை செய்து நாட்டின் பின்தங்கிய மாநிலங்களுக்கு உரிய நிதி ஆதாரங்களை வழங்கிடும்போது, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத அளவில், தேவையான நிதியை வழங்குவதற்கான ஒரு புதிய அணுகுமுறையை வடிவமைப்பதற்கான தேவை இன்று உருவாகி இருப்பதாகவே நம்புகிறேன். தமிழ்நாடு அரசின் சார்பாக நிதிக்குழுவின் பரிசீலனைக்கு வழங்கப்பட இருக்கும் விரிவான அறிக்கையினை கவனத்துடன் பரிசீலித்து, கடந்த காலங்களில் பல்வேறு நிதிக்குழுக்களின் பரிந்துரைகளினால் தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உரிய தீர்வை 16வது நிதிக்குழு வழங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். சமச்சீரான வாய்ப்புகளை வழங்கும் முற்போக்கான அணுகுமுறையின் மூலமாகவே இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தின் உண்மையான நோக்கத்தை அடைந்திட இயலும். ஒவ்வொரு மாநிலமும் அவற்றின் முழு திறனுக்கு ஏற்றவகையில் வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்திய திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை தமிழகத்திற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்: 16வது நிதி கமிஷனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.