×

மதிப்பெண்களை போலவே சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் மிக முக்கியமான கடமையாகும்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

சென்னை: மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும், கற்பித்த ஆசிரியர்களையும் மறக்காமல் இருக்க வேண்டும். மேலும், மதிப்பெண்களை விட நல்ல திறமையானவர்களாகவும், சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்பவர்களாகவும் மாணவர்கள் வளர வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் தின விழா சென்னை சாந்தோமில் நேற்று நடந்தது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ், சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள், மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றுகள், வழங்கிப் பேசியதாவது:
குழந்தைகள் தினத்தை சிறந்த நாளாக கருதுகிறேன். பல பணிகளில் மன உளைச்சல் இருந்தாலும் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை நேரில் சந்தித்தால் மனம் இளகிவிடும். கடந்த 1957ம் ஆண்டில் இந்திய பிரதமராக இருந்த நேருவிடம் மாணவர்கள் கேட்ட கேள்வி, எங்களையும் ஏன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கக் கூடாது என்பதுதான். அன்று அவர்கள் கேட்ட கேள்வியை தற்போது நிறைவேற்றியுள்ளார் நமது முதல்வர். 54 ஆசிரியர்களை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பினோம்.

முதல்வர் கூற்றுப்படி, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மேலும் மேலும் படிக்க வேண்டும். மதிப்பெண்களை தாண்டி திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கலை பண்பாட்டுத் திட்டத்தின் மூலம் திறமைகளை வளர்த்துக் கொண்ட மாணவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை காண முடிகிறது. இன்றைய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நாம் என்னவாக ஆக வேண்டும் என்பதை மாணவர்களே தெரிந்து வைத்திருக்கின்றனர். மாணவர்களுக்கு எதில் விருப்பம் இருக்கிறதோ அதில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

மாணவர்களுக்கு உழைக்கவே ஆசிரியர்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். மதிப்பெண்களை போலவே சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பது என்பதும் முக்கியமான கடமையாகும். இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்ததை செய்வேன் என்ற உறுதியை மாணவர்கள் பெற்றாக வேண்டும். பள்ளியையும், நமக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர்களையும் மறக்கக் கூடாது.
முன்னாள் மாணவர்களை உலகம் முழுவதிலும் இருந்து 7 லட்சம் பேரை நாங்கள் இணைத்துள்ளோம். அவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு ஏதாவது செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.

விழாவில், சிலப்பதிகாரம் முற்றோதல் செய்ததற்காக விருதுநகர் சாத்தூர் பகுதியை சேர்ந்த 2 மாணவியர், ஒரு மாணவன் என 3 பேர் தலா ₹5 ஆயிரமும், கலைத் திருவிழாவில் திறமை காட்டிய கரூர், ராணிப்பேட்டையை சேர்ந்த மாணவியர் 2 பேர், குழு நடனத்தில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த 10 பேர், பரிசுகள் மற்றும் சான்றுகள் பெற்றனர். இது தவிர உயர்கல்விக்காக அயல்நாடு செல்லும் வகையில் தர்மபுரி, சேலம், திருச்சி, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த 6 பேருக்கு விமான பயணச்சீட்டு மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

The post மதிப்பெண்களை போலவே சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் மிக முக்கியமான கடமையாகும்: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,School Education Minister ,Anbilmakesh Poiyamozhi ,
× RELATED ஊர்ப்புற நல் நூலகர் விருது: அமைச்சர் வழங்கினார்