×
Saravana Stores

தெலங்கானா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 39 ரயில்கள் ரத்து, 53 ரயில்கள் வழித்தடம் மாற்றம்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு 11 பெட்டிகள் கவிழ்ந்தது. இதில் 3 தண்டவாளங்கள் சேதமடைந்து, 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, 53 ரயில்கள் வழித்தடம் மாற்றிவிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் காஜிப்பேட்டை நோக்கி நேற்று அதிகாலை இரும்பு லோடு ஏற்றி கொண்டு சரக்கு ரயில் சென்றது. இந்த சரக்கு ரயில் தெலங்கானா மாநிலம் ராயவரம் – ராமகுண்டம் இடையே உள்ள ராகவ்பூர் என்ற இடத்தில் வந்தது. அப்போது 11 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக ரயில்வே துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் உஷார்படுத்தப்பட்ட அதிகாரிகள் ரயில்களை ஆங்காங்கே நிறுத்தினர். அதிவேக விரைவு ரயில்களுடன் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன. டெல்லி – சென்னை இடையே தெற்கில் இருந்து செல்லும் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் 39 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன் 7 ரயில்கள் பகுதி அளவிலும், 53 ரயில்கள் வெவ்வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.

The post தெலங்கானா மாநிலத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: 39 ரயில்கள் ரத்து, 53 ரயில்கள் வழித்தடம் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Telangana ,Ghaziabad ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் பார்மா நிறுவனத்திற்கு...