×
Saravana Stores

2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஆந்திரா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

திருமலை: ஒருங்கிணைந்த ஆந்திராவில் குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதித்து 1994ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் என்றும் சட்டம் இயற்றப்பட்டது.

தற்போதயை ஆந்திராவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. அதேசமயம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், எதிர்காலத்தில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தென்மாநில மக்கள் அதிகளவில் குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு அண்மையில் வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நேற்று 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களும் உள்ளாட்சி தேர்தலில் இனி போட்டியிட முடியும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஆந்திரா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Bill ,Andhra ,Andhra Pradesh ,Andhra Legislation ,
× RELATED இன்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்