×

ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

காதுவலி

காது வலி தானே என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனென்றால், சாதாரண வலி காது செவிட்டுத்தன்மைக்குக்கூட வழி வகுத்துவிடும். ஜலதோஷம், சளி, காய்ச்சலுக்கு அடுத்தபடியாக குழந்தைகளை அதிக அளவில் பாதிப்பது இந்த காதுவலி பொதுவாக அனைத்து வயதுக்குட்பட்டவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பொதுவாக பிறந்த ஆறு மாதம் முதல் 20 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இது அதிக அளவில் வருகிறது.

காது வலி என்பதை காது குடைச்சல் எனவும் சிலர் கூறுவர், இது பல்வேறு காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஒரு பொதுவான சொல்லாகவே பார்க்கப்படுகிறது. இந்த வலி அநேக சமயங்களில் மிகவும் தீவிரமானதாக வருவதில்லை என்றாலும் கடுமையான வலி வரும் பட்சத்தில் மிகுந்த வேதனையை தரவல்லது. காதுவலி பெரும்பாலும் பிற அறிகுறிகள் மற்றும் அடையாளங்களுடன் சேர்த்தே வரும். மற்றும் அதுவே வேறு சில நோய்களுக்கான அறிகுறியாக அமையவும் வாய்ப்புண்டு.

காதுவலியின் பொதுவான காரணங்கள்

மூக்கின் பின் பகுதியில் இருந்து காதுக்குச் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் நோய்த்தொற்று உண்டாவதே காதுவலிக்கான முதன்மைக் காரணம்.
குளிர்காலங்களில் சைனஸ் பிரச்னை உள்ளவர்களின் மூக்கினுள்ளே இருக்கும் சதைகள் வீங்க வாய்ப்புண்டு. இதனால் அவர்களுக்கு காதுவலி, தலைவலி போன்ற உபாதைகள் ஏற்படலாம் மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு குளிர்காலத்தின்போது காதுவலி ஏற்படும் வாய்ப்பு அதிகமுண்டு.மேலும், தொண்டையில் அழற்சி காரணமாகவும் காதுவலி ஏற்படலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் காதுவலி ஏற்படலாம்.

சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சை வெளியேற்றுவதும் காதுவலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.நீர்நிலைகள் மற்றும் கடலில் குளிப்பதாலும் நோய்த்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காதுவலியை ஏற்படுத்தலாம்.சளியும் மூக்கடைப்பும் அதிகமாகும்போதும் காதுவலி வரும். அதிகமாக சிரமம் எடுத்து மூக்கு சிந்தினாலும் காதில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

மாறுபட்ட காற்று அழுத்தம் குறிப்பாக விமானங்களில் பயணிக்கும் பொழுது காது வலி ஏற்படலாம். அதுபோன்று காதுகளை அடிக்கடி கையில் கிடைத்தவையெல்லாம் (தென்னங்குச்சி, தீப்பெட்டி குச்சி, இயர்பட்ஸ், இரும்புப் பொருட்கள், சேஃப்டி பின், குண்டூசி, ஆணி போன்றவை) கொண்டு குடைவது போன்ற காரணங்களினால் காதில் புண் ஏற்பட்டு காதுவலி வரலாம்.

பல் சொத்தை, கடவாய் பல் முளைக்கும் பருவத்தில் அதில் பிரச்னை, நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், தொண்டைச் சதை வளர்ச்சி, கழுத்து எலும்பு தேய்மானம், புற்றுநோய் போன்ற பல்வேறு காரணங்களால் அருகிலிருக்கும் உறுப்புகள் பாதித்து அதனால்கூட காதில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

காது நோய்களுக்கான பொதுவான அறிகுறிகள்

*காது தீவிர வலி
*காதில் அழற்சி
*புண் அல்லது புண்ணுடன் சீழ்
*காதில் சத்தம் (டின்னிடஸ்) இரைச்சல்
*அரிப்பு
*உணர்வின்மை அல்லது எரியும் உணர்வு
*தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் வரத்தொடங்கும்

காது நோய்களுக்கான அரிய அறிகுறிகள்

*காதிலிருந்து துர்நாற்றம் வீசும்
*காதிலிருந்து சீழ் வடிதல்
*தூங்குவதில் சிரமம்
*வீக்கம், காதில் சிவத்தல் மற்றும் காய்ச்சல்
*காதில் இழுத்தல் அல்லது இழுக்கும் உணர்வுகள்
*மெல்லும்போது வலி. அதன் காரணமாக பசியின்மை
*அதிகரித்த எரிச்சல்
*கடுமையான தலைவலி

காது நோய்களுக்கான ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேதம் ஒரு நபரின் உடல் வகை மற்றும் அவர்களின் முக்குற்ற (கபம், வாதம், பித்தம்) ஏற்றத்தாழ்வு ஆகியவற்றின்அடிப்படையில் சிகிச்சையளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இவ்வகையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பே காதின் உடற்கூறு. காது நோய்க்கான அறிகுறிகள், அதற்கான பொதுவான மற்றும் சிறப்பு சிகிச்சை முறைகளை சுஸ்ருத சம்ஹிதை எனும் ஆயுர்வேத கிரந்தத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதையில் மொத்தம் 28 காது நோய்கள் விளக்கப்பட்டுள்ளது.

ஆச்சாரியர் சுஷ்ருதா கூறுகையில், காது வலியை ஆயுர்வேதத்தின் மூலம் திறம்பட குணப்படுத்த இயலும் என்றும் இதில் காது மெழுகு, சீழ், அரிப்பு ஆகியவற்றுக்கு வெளிப்புறமாக சிகிச்சையளிப்பதன் மூலம் காதுகளை சுத்தம் செய்து, பின் காதுக்குள் சில மருந்துகளை செலுத்துவதன் மூலம் காதுவலியை முற்றிலுமாக நீக்குவது மட்டுமில்லாமல் காது பிரச்னைகள் வராமலும் பாதுகாக்கலாம் என கூறுகிறார்.

மேலும், அவர், காதுகளை சுத்தம் செய்வதற்கும், தொற்றுநோய் இல்லாமல் வைத்திருப்பதற்கும் சில பயனுள்ள நடைமுறைகளை விவரிக்கிறார். இதில் கர்ண பூரணம், கர்ண தூபனம், பிரமர்ஜனம், சிரோவிரேசனம் மற்றும் தவனம் அல்லது பிரக்ஷாலனம் ஆகியவை அடங்கும். இச்சிகிச்சைகள் இன்றளவும் நல்ல பலன் தரக்கூடிய முறைகளாகவே இருக்கின்றன.

வெளிப்புறச் சிகிச்சை முறை

கர்ண மல நிர்ஹரணம் என்று சொல்லப்படும், காதில் உள்ள கழிவுகளை அகற்ற வெதுவெதுப்பான நீர் அல்லது திரிபலா கஷாயத்தைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.
கர்ண பூரணம் என்னும் ஆயுர்வேத சிகிச்சையில் காதில் எண்ணெய் அல்லது மூலிகைச் சாற்றை தேக்கி வைக்க வேண்டும். இதன்மூலம் காதுவலி குறையும்.கர்ண தூபனம் – நொச்சி, வேம்பு, குங்கிலியம் போன்ற மூலிகை புகை சிகிச்சை காது நோய்களை குணப்படுத்தும். தஸ்யம் என்னும் மூக்கில் எண்ணெய்ச் சொட்டுக்கள் விடும் முறையில் தயாரிக்கப்படும் மருந்துகளான அனுதைலம், ஷிரபலா தைலம், நாராயண தைலம், சந்தனாதி தைலம் ஆகியவற்றை நஸ்யமாக பயன்படுத்தலாம்.

மேலும் காது நோய்களுக்கென பிரசித்திபெற்ற ஆயுர்வேத மருந்துகளாக சாரிவாதிவடி, லட்சுமி விலாச ரஸம், பலா தைலம், தீபிகா தைலம், திரிபலா குக்குலு, ரஸ்னாதி குக்குலு, ஹரித்ரா காண்ட சூரணம், தங்கன பஸ்மம், பிரவாள பஸ்மம், பத்யஷடங்கம் கஷாயம், வாரனாதி கஷாயம், குக்குலு திக்தக கஷாயம், காஞ்சனார குக்குலு போன்ற மருந்துகளும் காது நோய்க்காக பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது. வலிக்கான காரணம் எதுவாக இருந்தாலும் செய்து கொள்வது அவசியம். வீட்டு வைத்தியங்களை காது பிரச்னைகளுக்கு பின்பற்றும் நிலையில் சில முக்கியமான அறிகுறிகளை, நோய்களை நாம் உதாசீனப்படுத்துவதாக மாறிவிடும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

ஆயுர்வேதம் காது வலியால் அவதிப்படும்போது குளிர் மற்றும் காற்று நிலைகளைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது தயிர், வாழைப்பழம், புளிப்புப் பழங்கள் போன்ற சில உணவுகளைத் தவிர்க்கவும் பரிந்துரைக்கிறது.காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானாக வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, கூர்மையான பொருட்கள், பட்ஸ் வைத்து சுத்தம் செய்யக்கூடாது. 80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும்.

அதற்கு மேல் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்க வேண்டும். காதில் இயர்போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் வீடியோகேம்ஸ், படம் பார்ப்பது, செல்போன் பேசுவது காதுவலிக்கு தற்போதுள்ள முக்கியமான காரணமாகும். நீண்ட நேரம் செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் பேசும் பொழுது ஸ்பீக்கர் மூலமாகவோ அல்லது காதை மாற்றி மாற்றிப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். சைனஸ், தொண்டை சதை அழற்சி. தாடை எலும்பில் பிர்சனை இருந்தால் உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காதுவலி வராமல் தடுக்கலாம்.

தூங்கும்முறை பக்க வாட்டில் தூங்கும் பழக்கம் இருந்தால் காதுகளில் அழுத்தம் ஏறபடாமல் தலையில் அழுத்தம் விழுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். காதில் அழுத்தம் ஏறபட்டால், வலி உருவாகும். ஏற்கெனவே வலி உள்ளவர்களுக்கு வலி அதிகரிக்கும். ஆகையால் தூங்கும் நிலை மிகவும் முக்கியமானதாகும்.பல நேரங்களில் விமானப் பயணத்தின்போது காதுகளில் கடுமையான வலி ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், சூயிங்கம் மெல்லலாம். அவ்வாறு செய்வதன் மூலம் காற்றழுத்த மாற்றத்தினால் வரும் வலியிலிருந்து விடுபடலாம். ஒவ்வொரு முறை குளிக்கும்போதும் காதைச் சுற்றி மசாஜ் செய்யலாம்.

புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நல்ல சுகாதாரத்தைப் பராமரிக்கவும், சளியை தவிர்க்கவும், கைகளை தவறாமல் கழுவவும். கண்கள் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்கவும் வேண்டும். பூச்சி காதுக்குள் நுழைந்தால், சில சொட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டால் அது பூச்சியைக் கொன்றுவிடும். எண்ணெய்யை காய்ச்சி ஊற்றக் கூடாது. குச்சியை வைத்துக் குடைவது கூடாது. தலையைச் சாய்த்தால் பூச்சி தானே வந்துவிடும். அப்படியும் வராவிட்டால் தக்க மருத்துவர் மூலம் நீக்க வேண்டும்.

காது நோய்த்தொற்றுகள் மற்றும் வலிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பயனுள்ள மூலிகைகளுள் வில்வம், துளசி, வேம்பு ஆகியவை அடங்கும் இந்த மூலிகைகளின் தயாரிப்புகளை காது நோய்த்தொற்றுகளுக்கு பயன்படுத்தலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post ஆயுர்வேதத் தீர்வு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வரும் முன் காப்போம்!