×

குழந்தைக்கு விளையாட்டு காட்டியபோது விபரீதம் கார் மோதி டீக்கடைக்காரர் பலி

*பதைபதைக்க வைத்த சிசிடிவி காட்சி

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே குழந்தை விளையாட்டு காட்டியபோது, பாய்ந்து சென்ற கார் மோதிய விபத்தில் டீக்கடைக்காரர் பரிதாபமாக பலியானார். இந்நிலையில் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் அடுத்த பெரியார் நகரை சேர்ந்தவர் முத்து(60). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவரது தங்கை மகன் வெங்கடேசன்(24). அதே பகுதியை சேர்ந்த இவருக்கு திருமணமாகி, 4 வயதில் மகன் உள்ளார். முத்துவின் வீட்டருகே வெங்கடேசனின் வீடும் உள்ளது.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு வெங்கடேசன் தனது காரில் 4 வயது மகனுடன் அமர்ந்து, காரை ஸ்டார்ட் செய்து ‘கியர்’ போடாமல் ‘எக்ஸ்லேட்டர்’ மட்டும் கொடுத்து விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்போது திடீரென காரின் ‘கியர்’ விழுந்தது. இதனால் அதிவேகமாக கிளம்பிய கார் பாய்ந்து சென்றது. அந்த நேரத்தில் தனது வீட்டின் எதிரே வெளியில் நின்றிருந்த முத்துவின் மீது கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முத்து மீது கார் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைக்கு விளையாட்டு காட்ட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில், டீக்கடைக்காரர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post குழந்தைக்கு விளையாட்டு காட்டியபோது விபரீதம் கார் மோதி டீக்கடைக்காரர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppathur ,Thirupathur ,Periyar ,
× RELATED பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு...