×

பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற திருப்பத்தூர் அரசு மருத்துவமனை

திருப்பத்தூர்: பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்திலேயே திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாதத்திற்கு சுமார் 650 பிரசவங்கள் பார்க்கப்பட்டு வருகிறது. அதில் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தை சிறப்பு சிகிச்சை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாதத்திற்கு 180 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இங்கு பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு (ரட்டினோபதி) Rop நோய் கண்டறியப்பட்டு லேசர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண் பார்வை மீட்டெடுக்கப்படுகிறது, அதிநவீன கருவிகள் மூலம் கண் பரிசோதனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளில் 1 கிலோ 500 கிராம் எடை குறைவாக 97 குழந்தைகள் பிறந்துள்ளது. மேலும் 700 கிராம் 600 கிராம் என 37 குழந்தைகள் பிறந்துள்ளது. இந்த குழந்தைகளை அதிநவீன சுவாச கருவிகள் (வென்டிலேட்டர்) மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது:திருப்பத்தூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிறந்தவுடன் மூச்சுத்திணறல், குறைமாதம், ரத்த மாற்று சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறோம். மேலும் எடை குறைவாக பிறந்த குறை மாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர், தருமபுரி மருத்துவக்கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகளில் அளிக்கும் சிகிச்சைகளை போன்று இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் சிறந்த மருத்துவமனையாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை தமிழக அரசு பாராட்டி 2 முறை சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் இந்த மருத்துவமனை தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று வரை 37 குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

எடை குறைவு குழந்தைகளை கண்காணிப்பது எப்படி?
கருவில் இருந்து குழந்தை பிறக்கும்போது 3 கிலோ எடை இருக்க வேண்டும். அவை நோய் எதிர்ப்பு சக்திகளுடன் கூடிய திடகாத்திர குழந்தைகளாக இருக்கும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு சிகிச்சைகள் உள்ளது. 1 கிலோவுக்கு மேல் எடை இருந்தால் தாய்மார்கள் அந்த குழந்தைகளை தாயின் மார்பில் அணைத்தவாறு இருக்க வேண்டும். வெளியில் நபர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்க கூடாது. அப்படி வளர்க்கப்பட்டால் அந்த குழந்தைக்கு தாயின் சக்தி மற்றும் கதகதப்பான இளஞ்சூடு உள்ளிட்டவை ஏற்படுத்தி குழந்தை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

மேலும் அடிக்கடி மருத்துவமனையில் குழந்தையின் சிகிச்சை தன்மை குறித்தும் தாய்ப்பால் அருந்துவது உள்ளிட்டவைகளை கண்காணிக்க வேண்டும். பாட்டி வைத்தியம், நாட்டு மருந்துகள் உள்ளிட்டவைகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. குழந்தைகளின் குடல் தாய்ப்பாலை தவிர வோறு எதையும் ஜீரணிக்காது. இதனை எல்லாம் கண்காணித்தால் குழந்தையை சீக்கிரமாக கண்காணித்து நாம் இறப்பிலிருந்து தவிர்க்கலாம் என டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

The post பச்சிளம் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற திருப்பத்தூர் அரசு மருத்துவமனை appeared first on Dinakaran.

Tags : Thirupathur Government Hospital ,Tamil Nadu ,Tirupathur ,Tirupathur Government Hospital ,Head Hospital ,District ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு...