×
Saravana Stores

திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா நேற்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்.

மேலும் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், ஆத்துப்பட்டி பகுதியில் குடகனாறு ஆற்றின் குறுக்கே ஆத்துப்பட்டி மற்றும் மால்வார்பட்டியை இணைக்கும் வகையில் ரூ.6.93 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம், குரும்பப்பட்டி ஊராட்சி, ராமையம்பட்டி, மாங்கரை ஊராட்சி, நடுப்பட்டி ஆகிய இடங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகள், மாங்கரை ஊராட்சியில் கிராமப்புற வீடு பழுது பார்த்தல் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், மாங்கரை ஆற்றின் குறுக்கே மாங்கரை முதல் கொட்டாரப்பட்டி வழியாக கணேசபுரம் வரை நபார்டு திட்டத்தில் ரூ.3.34 கோடி மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள், புதுச்சத்திரம் ஊராட்சிப் பகுதியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணிகள், மாங்கரை ஆற்றில் வாய்க்கால் சீரமைப்பு பணிகள் ஆகியவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. அதில் ஊராட்சித்துறை இயக்குநர் பொன்னையா, திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்புகள் பழுது நீக்கம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் விவரங்கள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை கேட்டறிந்தார். பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Rural ,Development and Administration ,Department ,Ponnaiya ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள்...