×

தகாத உறவுக்கு இடையூறு? மாமியார் வீட்டு முன் தொழிலாளி குத்திக்கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை


தர்மபுரி: தர்மபுரி மகேந்திரமங்கலம் அருகே மாமியார் வீட்டு முன்பு தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகாத உறவு விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என மனைவி மற்றும் மாமியாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் என்கிற வேலவன் (40), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா (35). 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறின்போது, சுகன்யா கோபித்துக்கொண்டு மகேந்திரமங்கலம் பிக்கனஅள்ளி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதனிடையே நேற்றுமுன்தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக அசோக்குமார் பிக்கனஅள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கேயே அசோக்குமார் தங்கினார். இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 2மணியளவில் அசோக்குமார் மாமியாரின் வீட்டின் முன்பு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அசோக்குமாரின் கழுத்தில் கத்தியால் குத்தி மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட அசோக்குமாரின் மனைவி சுகன்யாவுக்கும் சமத்துவபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த அசோக்குமார் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கோபித்துக்கொண்டு சுகன்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி மனைவி பெற்றோர் வீட்டில் இருப்பதால் அவருடன் பண்டிகையை கொண்டாடுவதற்காக அசோக்குமார் நேற்றுமுன்தினம் மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் அங்கேயே தங்கியுள்ளார். இதனிடையே இன்று அதிகாலை அவரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.

தகாத உறவுக்கு அசோக்குமார் இடையூறாக இருப்பதால் அவரது மனைவி சுகன்யா தனது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அசோக்குமாரின் மனைவி சுகன்யா மற்றும் சுகன்யாவின் தாய் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களிடம் விசாரித்த பிறகு தான் கொலைக்கான முழு விவரம் தெரியவரும். சுகன்யாவின் தகாத உறவு காதலன் பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர். மேலும் அசோக்குமாரை வேறு எங்கேனும் கொலை செய்து விட்டு பின்னர் அவரது உடலை மாமியார் வீட்டு முன்பு மர்மநபர்கள் வீசி சென்றனரா? அல்லது மாமியார் வீட்டின் முன்பு தான் அவர் கொலை செய்யப்பட்டாரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தகாத உறவுக்கு இடையூறு? மாமியார் வீட்டு முன் தொழிலாளி குத்திக்கொலை: மனைவியிடம் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Mahendramangalam ,Dharmapuri District ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்