×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு; ரூ10 லட்சத்திற்காக நண்பனை இரும்பு ராடால் அடித்து கொன்று மலட்டாற்றில் புதைத்தேன்: கைதான புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்; உடலை தேடும் போலீசார்


திருவெண்ணெய்நல்லுர்: திருவெண்ணெய் நல்லூர் அருகே ₹10 லட்சத்துக்காக நண்பனை கொன்று ஆற்றில் புதைத்த புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சேமங்கலம் கிராமத்தில் வசித்தவர் முருகன் மகன் முத்துக்குமரன் (27), விவசாயி. இவர் கடந்த செப்டம்பர் 19ம் தேதி மாயமானார். இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். முத்துக்குமரனின் செல்போனை ஆய்வு செய்தபோது அதே ஊரை சேர்ந்த மணிவண்ணன் மகன் தமிழரசன் (26) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. அவரை நேற்று பிடித்து விசாரணை நடத்தியதில் முத்துக்குமரனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இதனை தொடர்ந்து தமிழரசன் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முருகன், தனது விவசாய நிலத்தில் பயிர் செய்த சவுக்கு மரத்தை வெட்டி விற்ற பணம் ரூ.10 லட்சத்தை தனது மகன் முத்துக்குமரன் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இந்நிலையில் வங்கியில் பணம் எடுக்க தெரியாததால் தனது நண்பர் தமிழரசனை முத்துக்குமரன் வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அவரை ஏமாற்றி காசோலையில் கையெழுத்து வாங்கிய தமிழரசன், பணத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி கொண்டார். ஆனால் பணத்தை முத்துக்குமரனிடம் கொடுக்காமல் 4 மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகன், பணத்தை வங்கியில் இருந்து எடுக்க தமிழரசனை கூப்பிட்டுள்ளார்.

அப்போது தமிழரசன் வங்கியில் ‘நெட் பிராப்ளம் உள்ளது என்றும், சந்தேகமாக இருந்தால் விக்கிரவாண்டியில் உள்ள வங்கி தலைமை அலுவலகத்திற்கு சென்று விசாரித்துக்கொள்ளலாம்’ என கூறி முத்துக்குமரனை மட்டும் அழைத்து சென்றுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. பின்னர் வீட்டுக்கு வரும் வழியில் சேமங்கலம் மலட்டாறு பகுதி அருகே தமிழரசன் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறி முத்துக்குமரனை தனது நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளான். அப்போது முத்துக்குமரன் பணத்தை திருப்பிக்கேட்டபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழரசன், முத்துக்குமரனை பிடித்து பைக்கில் தள்ளி தாக்கினாராம். இதில் முத்துக்குமரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு கையில் வைத்திருந்த இரும்பு ராடால் தலையில் சரமாரி அடித்ததில் முத்துக்குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நிலத்தின் அருகே உள்ள மலட்டாறு வாய்க்கால் கரையோரமாக முத்துக்குமரனின் உடலை புதைத்துவிட்டு, அவரிடம் இருந்த செல்போனை அருகில் உள்ள குட்டையில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல வீட்டுக்கு சென்றுள்ளார்.
தற்போது செல்போன் உரையாடல் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இதையடுத்து விழுப்புரம் டிஎஸ்பி ரவீந்திரகுமார் குப்தா, திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், வட்டாட்சியர் செந்தில்குமார், தடயவியல் நிபுணர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று முத்துக்குமார் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டி பார்த்தனர். ஆனால் உடல் கிடைக்கவில்லை. சமீபத்தில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் மழை வெள்ளப்பெருக்கின்போது உடல் அடித்து செல்லப்பட்டதா? என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது.

இதனால் வேறு எங்காவது கரை ஒதுங்கியதா? என்ற கோணத்திலும் மலட்டாற்றின் கரையோரத்தில் போலீசார் தேடி வருகின்றனர். கொலை சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அடுத்த 2 மாதத்தில் அதாவது கடந்த நவம்பர் மாதத்தில் தமிழரசனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் முத்துக்குமரனிடம் ஏமாற்றிய பணத்தை புதுமாப்பிள்ளையான தமிழரசன் என்ன செய்தார்? திருமண செலவுக்கு பயன்படுத்தினாரா? அல்லது வேறு யாருக்காவது கொடுத்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் உடலை புதைக்க தமிழரசனின் நண்பர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு; ரூ10 லட்சத்திற்காக நண்பனை இரும்பு ராடால் அடித்து கொன்று மலட்டாற்றில் புதைத்தேன்: கைதான புதுமாப்பிள்ளை பரபரப்பு வாக்குமூலம்; உடலை தேடும் போலீசார் appeared first on Dinakaran.

Tags : THIRUVENNEYNALLUR ,Thiruvenney Nallur ,Semangalam ,Vilupuram District Thiruvenneynallur ,Panic ,Malattar ,Dinakaran ,
× RELATED திருவெண்ணெய் நல்லூர் அருகே மலட்டாறு...