×

கன்னியாகுமரியில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு; ரகசிய அறையில் இருந்த 35 பவுன் தப்பியது


கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் ஆசிரியையின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் நகை, பணத்ைத திருடி சென்றுவிட்டனர். இருப்பினும் பீரோவின் ரகசிய அறையில் இருந்த 35 பவுன் நகை தப்பியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள பூங்குளத்தான்விளை பகுதியை சேர்ந்தவர் சகாய வின்சியூஸ் (55). துபாய் நாட்டில் வேலை பார்த்தார். தற்போது குமரியில் வசித்து வருகிறார். அவரது மனைவி இனிதா (49). அந்த பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளிகளில் அரையாண்டு விடுமுறைகளால் கணவன், மனைவி 2 பேரும் வழுக்கம்பாறையில் உள்ள இனிதாவின் தந்தை வீட்டுக்கு சென்றனர். இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் வேலைக்கு செல்வதற்காக இனிதா தனது கணவருடன் வீட்டுக்கு வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவின் உள்ளே இருந்த ஒரு அறையில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 15 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக பீரோவில் இருந்த மற்றொரு ரகசிய அறையில் வைக்கப்பட்டு இருந்த 35 பவுன் நகைகள் இருப்பது மர்ம நபர்களுக்கு தெரியவில்லை. இதனால் அந்த நகைகள் தப்பின. இதுகுறித்து தம்பதியினர் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. மகேஷ்குமார், எஸ்.ஐ. கார்த்திக் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். ஆசிரியையின் வீட்டில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தவில்லை. இதனால் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர் வீட்டிலும் கைவரிசை
கன்னியாகுமரி கிளாரட் நகர் 1வது தெருவை சேர்ந்தவர் ராபின்சன். வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி ஹெப்சி. ஆசிரியை. நேற்று புத்தாண்ைட கொண்டாட ஹெப்சியின் தந்தை வீட்டுக்கு சென்றனர். பின்னர் இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த வெளிநாட்டு கைகடிகாரம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் 2 வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கன்னியாகுமரியில் துணிகரம்: ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு; ரகசிய அறையில் இருந்த 35 பவுன் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Bon ,Kanyakumari Railway Station ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு...