- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- இந்தியா
- முதலமைச்சர் கோப்பை
சென்னை: இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக விளையாட்டு துறையில் தமிழ்நாடு புகழ் பெற்றிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம்முடைய விளையாட்டு துறை எத்தனையோ மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 2023ம் ஆண்டுக்கான விளையாட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த மாநிலம் என்று தமிழ்நாட்டுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த நமது அரசு சார்பில் ஏராளமான உதவிகளை வழங்கிக் கொண்டு வருகிறோம். விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை ரூ.30 லட்சமாக உயர்த்தியதோடு, இந்த திட்டத்தில் பயன்பெறுகிற பயனாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல, எம்ஜிஆர் மாவட்ட விளையாட்டு வளாகம், செயற்கை ஓடுதள பாதை மறுசீரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு என்று ஏராளமான திட்டங்கள் விளையாட்டு துறை செய்து கொண்டு வருகிறது.
இவை மூலமாக இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக விளையாட்டு துறையில் புகழ் பெற்றிருக்கிறது தமிழ்நாடு. அதற்கான அடித்தளங்களில் மிகமிக முக்கியமானது இந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள். இந்த போட்டிகள் திறமைகளை மட்டும் வெளிக்காட்டவில்லை. நமது விளையாட்டு துறையில் பணியாற்றும் பயிற்சியாளர்களின் திறமையையும் வெளிக்காட்டி இருக்கிறது.
இந்த திறமையால்தான் விளையாட்டு துறை தமிழ்நாட்டில் தனியாக மின்னுகிறது. தம்பி மாரியப்பன், தங்கவேல், துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சிவன், மணிஷா ராமதாஸ் ஆகியோரும் இந்த ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, எம்பி, எம்எல்ஏக்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற தடகள விளையாட்டு வீரர் திரு. மாரியப்பன், டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர் சரத் கமல் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* 3330 வீரர்களுக்கு ரூ.109 கோடி ஊக்கத் தொகை..
கடந்த 3 ஆண்டுகளில் 3330 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.109 கோடி ஊக்கத் தொகையை முதல்வர் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024 ன் நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வரின் வழிகாட்டுதலில், இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாடு உருவெடுத்துக் கொண்டு வருகிறது.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள். தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேசன் துவங்கி ஒன்றரை வருடத்தில் 700 வீரர்களுக்கு, ரூ.12 கோடி அளவுக்கு நிதி உதவிகளை வழங்கி இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளில், 3330 வீரர்களுக்கு ரூ.109 கோடி உயரிய ஊக்கத் தொகையாக முதல்வர் வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார் என்றார்.
* 254 பதக்கங்கள் பெற்று சென்னை முதலிடம்..
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. முதலமைச்சர் கோப்பை – 2024 மாநில அளவிலான இறுதி போட்டிகளில் 1,071 பதக்கங்களை வெல்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் போட்டியிட்டனர். இதில் சென்னை மாவட்டம், 105 தங்கம், 80 வெள்ளி மற்றும் 69 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 254 பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் முதல் இடத்தையும், செங்கல்பட்டு மாவட்டம், 31 தங்கம், 26 வெள்ளி மற்றும் 36 வெண்கலப் பதக்கங்கள், என மொத்தம் 93 பதக்கங்கள் வென்று இரண்டாம் இடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் 23 தங்கம், 40 வெள்ளி மற்றும் 39 வெண்கலப் பதக்கங்கள், என மொத்தம் 102 பதக்கங்கள் வென்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
“முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்-2024”ல் முதல் மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட அணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் கோப்பைகளை வழங்கி, பாராட்டினார். முதலிடத்தை பெற்ற சென்னை மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இரண்டாம் இடத்தை பெற்ற செங்கல்பட்டு மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவர் எஸ்.அருண்ராஜ், மூன்றாமிடத்தை பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட அணியின் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவர் கிராந்திகுமார் பாடி ஆகியோருடன் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள், மண்டல முதுநிலை மேலாளர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர்களும் பெற்று கொண்டனர்.
The post விளையாட்டுத் துறையில் உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.