×
Saravana Stores

நவ.5 முதல் சென்னையில் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: சேலஞ்சர்ஸ் போட்டியும் அறிமுகம்

சென்னை: கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் 2வது தொடர் நவ.5ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா சென்னையில் நேற்று கூறியதாவது: செஸ் உலகின் ஈர்ப்பு மையமாக சென்னை திகழ்கிறது என்றால் மிகையில்லை. தமிழ்நாடு முதல்வர், துணை முதல்வர் வழிகாட்டுதலில் பல்வேறு சர்வதேச போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் (எஸ்டிஏடி) முதல்முறையாக கடந்த ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.

அதில் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றார். அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை எதிர்த்து விளையாட உள்ளார். இப்படி முதல் தொடரிலேயே செஸ் உலகின் கவனத்தை ஈர்த்த சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2வது தொடர் நவ.5ம் தேதி முதல் நவ.11 வரை நடைபெற உள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இந்தப்போட்டி, மொத்தம் 7 சுற்றுகளாக ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும். இப்போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 8 கிராண்ட் மாஸ்டர்ஸ் களம் காண உள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தம் 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். முதல் பரிசு ரூ.15லட்சம். இப்போட்டியில் அரவிந்த் சிதம்பரம் (தமிழ்நாடு), அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி ஆகியோர் இந்தியா சார்பில் விளையாட உள்ளனர்.

இந்த ஆண்டு கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன் போட்டியுடன், கிராண்ட் மாஸ்டர்ஸ் சேலஞ்சர்ஸ் போட்டியும் நடைபெற உள்ளது. இதுவும் 7 சுற்றுகள் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படும். இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சம். முதல் பரிசு ரூ.6 லட்சம். தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி ரமேஷ்பாபு, கார்த்திகேயன் முரளி, பிரணவ் வெங்கடேஷ், பிரணேஷ் முனிரத்தினம் உள்பட இப்போட்டியில் பங்கேற்கும் 8 பேரும் இந்திய வீரர், வீராங்கனைகள். இந்த சந்திப்பின்போது எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி, செஸ் கிராண்ட் மாஸ்டர்களான பயிற்சியாளர் ஸ்ரீநாத், வீராங்கனை வைஷாலி ஆகியோர் பங்கேற்றனர்.

* மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்போர்
எண் வீரர்
1. அர்ஜூன் எரிகைசி (இந்தியா)
2. லெவோன் அரோனியன் (ஆர்மீனியா)
3. மேக்சிம் வாச்சியர் லக்ரேவ் (பிரான்ஸ்)
4. விதித் குஜராத்தி (இந்தியா)
5. பர்ஹம் மகசூட்லு (ஈரான்)
6. அலெக்சி சரணா (ரஷ்யா)
7. செய்யது அமின் தபதபாய் (ஈரான்)
8. அரவிந்த் சிதம்பரம் (இந்தியா)

* சேலஞ்சர்ஸ் போட்டியில் களமிறங்குவோர்
(அனைவரும் இந்தியர்கள்)
எண் வீரர்
1. ருனங் சத்வானி
2. அபிமன்யூ புராணிக்
3. கார்த்திகேயன் முரளி
4. லியோன் லூக் மென்டோன்கா
5. பிரணவ் வெங்கடேஷ்
6. பிரணேஷ் முனிரத்தினம்
7. ஹரிகா துரணவல்லி
8. வைஷாலி ரமேஷ்பாபு

The post நவ.5 முதல் சென்னையில் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: சேலஞ்சர்ஸ் போட்டியும் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Masters Chess Championship ,Chennai ,Grand Masters Chess Championship ,Tamil Nadu Youth Welfare and Sports Development Department ,Adulya Mishra ,
× RELATED ஒரே நேரத்தில் இரு கிராண்ட்மாஸ்டர்...