×

ஒயிட்வாஷ் முனைப்பில் நியூசிலாந்து கடைசி டெஸ்ட் மும்பையில் இன்று தொடக்கம்


மும்பை: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மொத்தம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதற்கான வெற்றிப் புள்ளிகளைப் பெற முன்னணி அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதால், இந்த தொடர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கை சென்று விளையாடிய டெஸ்ட் தொடரில் 0-2 என ஒயிட்வாஷ் ஆகியிருந்ததால், சொந்த மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணிக்கு ஈடுகொடுக்க முடியாது என்பதே அனைவரது கணிப்பாகவும் இருந்தது. ஆனால், பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. கனமழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், மேகமூட்டமாக இருந்த 2வது நாள் காலையில் டாஸ் வென்ற ரோகித் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தது ‘பூமராங்’ போல பேரிடியாக இந்திய அணியின் தலையில் இறங்கியது.

அனல் பறந்த நியூசிலாந்து வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியாவின் ‘ஸ்டார்’ பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பு நடத்திய காட்சி கண் கொண்டு பார்க்க முடியாத வகையில் அவ்வளவு கேவலமாக இருந்தது என்றால் மிகையல்ல. கோஹ்லி உள்பட 5 பேர் டக் அவுட். பன்ட் எடுத்த 20 ரன் தான் அதிகபட்சம். இந்தியா 31.2 ஓவரில் 46 ரன்னுக்கு ஆல் அவுட்டானது தான் சமூக வலைத்தளங்களில் அன்றைய ‘வைரல் டாபிக்’ ஆக இருந்தது.

அதே ஆடுகளத்தில் ரச்சின் 134, கான்வே 91, சவுத்தீ 65 ரன் விளாச… நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 402 ரன் குவித்தது. இந்தியா 2வது இன்னிங்சில் சிறப்பாகவே விளையாடியது. சர்பராஸ் 150, ரிஷப் 99, கோஹ்லி 70, ரோகித் 52, ஜெய்ஸ்வால் 35 ரன் விளாச இந்தியா 462 ரன் குவித்து ஆட்டமிழந்தது. அந்த இன்னிங்சிலும் கூட 54 ரன்னுக்கு கடைசி 7 விக்கெட்டை பறிகொடுத்தது இந்திய அணி பேட்டிங் வரிசையின் நிலையற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

107 ரன் என்ற இலக்கை நியூசி. வீரர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் எளிதாகவே எட்ட, அந்த அணிக்கு 1-0 என முன்னிலை கிடைத்தது. நியூசிலாந்தின் 2வது இன்னிங்சில் அஷ்வினுக்கு 2 ஓவர் மட்டுமே கொடுத்து ரோகித்தின் வியூகம் பெரிய அளவில் விமர்சனத்துக்குள்ளானது. சற்றும் எதிர்பாராத இந்த பின்னடைவால் அதிர்ச்சி அடைந்த இந்திய அணி நிர்வாகம், புனேவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிக்கு ‘வழக்கமான’ நன்கு பழக்கமான! சுழல் வியூகத்தை கையில் எடுத்தது. முதல் நாளில்… முதல் ஓவரில்… அல்ல! முதல் பந்தில் இருந்தே சுழன்று திரும்ப வேண்டும் என்று ஆடுகள பராமரிப்பாளருக்கு பிசிசிஐ தரப்பில் இருந்து உத்தரவு பறந்தது.

நல்ல பார்மில் இருக்கும் தமிழ்நாடு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கும் அவசர அழைப்பு! டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்தை 259 ரன்னில் சுருட்டியதால் இந்திய தரப்பு உற்சாகம் அடைந்தது. அதிலும் வாஷிங்டன் 7, அஷ்வின் 3 என ஸ்பின்னர்கள் விக்கெட் வேட்டை நடத்தியதால் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்று மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ரன்னுக்கு ஆல் அவுட்டாகும்… அதிலும் சான்ட்னரின் சுழலை சமாளிக்க முடியாமல் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. நியூசிலாந்து 2வது இன்னிங்சில் தட்டுத்தடுமாறி 255 ரன் எடுக்க… இந்தியாவுக்கு 359 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை நாள் அவகாசம் இருந்ததால் எப்படியாவது வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அனுபவ வீரர்கள் ரோகித் (8), கோஹ்லி (17) ஏமாற்றினாலும்… மிகுந்த தன்னம்பிக்கையுடன் அடித்து விளையாடிய ஜெய்ஸ்வால் 77 ரன், ஓரளவு தாக்குப்பிடித்த கில் 23, வாஷிங்டன் 21, ஜடேஜா 42, அஷ்வின் 18 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 245 ரன்னில் சுருண்டு 113 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்த இன்னிங்சிலும் சான்ட்னரின் சாகச சுழல் தான் இந்திய பேட்ஸ்மேன்களை மண்ணைக் கவ்வ வைத்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்ந்து 13 விக்கெட் சாய்த்த அவர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்திய நியூசிலாந்து 2-0 என முன்னிலை பெற்றதுடன், இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் தோல்வியையே சந்திக்காமலும் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்றும் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியின் உலக சாதனைப் பயணம்… புனே தோல்வியால் பரிதாபமாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட், மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தாலும்… நியூசிலாந்துடன் நடக்கும் கடைசி டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ள 5 டெஸ்டில் குறைந்தபட்சம் 4 வெற்றிகளையாவது குவித்தால் தான் பைனல் வாய்ப்பு உறுதியாகும் என்ற இடியாப்ப சிக்கலில் வசமாக சிக்கியுள்ளது. ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் நியூசிலாந்தும், ஆறுதல் வெற்றியுடன் புள்ளிகளை அதிகரிக்க இந்தியாவும் வரிந்துகட்டுவதால் மும்பை டெஸ்டில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

The post ஒயிட்வாஷ் முனைப்பில் நியூசிலாந்து கடைசி டெஸ்ட் மும்பையில் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Whitewash ,Mumbai ,New Zealand ,INDIA ,MUMBAI BANKADE STADIUM ,Dinakaran ,
× RELATED இலங்கையை ஒயிட்வாஷ் செய்ய...