×
Saravana Stores

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதா? அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஆயுள் தண்டனை கைதியின் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளு நரால் மீற முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், ‘‘கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருகிறேன். நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி மனு அளித்திருந்தேன். மாநில அளவிலான குழு உரிய ஆய்வு செய்து முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரை செய்தது. தமிழக முதல்வர் தலைமையிலான அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், அந்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார். எனவே, ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்தான். ஆளுநர் அதை மீற முடியாது. இதில் ஆளுநருக்கு தனிப்பட்ட தார்மீக உரிமை இல்லை. எனவே, மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்ய மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் மனுவை மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

தமிழக அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகளை ஏற்காமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்புவது அல்லது பரிசீலனை என்று கூறி நிறுத்தி வைப்பது போன்றவற்றை செய்து வந்தார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கோப்புகளை நிறுத்தி வைத்திருப்பது, அரசின் முக்கிய முடிவுகளை திருப்பி அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து பல முறை நீதிமன்றத்துக்கே சென்று தமிழக அரசு முறையிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு பல கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், தற்போதும் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதா? அமைச்சரவை முடிவை ஆளுநர் மீற முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Madras High Court ,Chennai ,Governor of ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED குரங்குக் குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: ஐகோர்ட்