×
Saravana Stores

நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து

பெங்களூரு: மூடா நில முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதி அமலாக்க துறை சித்தராமையாவுக்கு எதிராக பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது மனைவி ெபயரில் இருந்த நிலத்துக்கு பதிலாக வேறு நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் சினேமயி கிருஷ்ணா அளித்த புகாரின் கீழ் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கினார்.

இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா ரிட் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் சித்தராமையா மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த மைசூரு லோக்ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டது. அதையேற்று சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி மற்றும் நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது லோக்ஆயுக்தா போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையில் சித்தராமையாவிடம் எப்படி விசாரணை நடத்துவது என்பது குறித்து லோக்ஆயுக்தா டிஐஜி மற்றும் கூடுதல் டிஜிபி ஆகியோரிடம் லோக்ஆயுக்தா எஸ்பி உதேஷ் ஆலோசனை நடத்தினார். இரண்டொரு நாளில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தன்மீது விசாரணை நடத்த ஆளுநர் வழங்கிய அனுமதியை உறுதி செய்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வது தொடர்பாக கடந்த வாரம் சட்ட நிபுணர்களுடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினார். ஆனால் தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அதிகாரிகள் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய கெடு நிர்ணயம் செய்துள்ளதால், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளதாக அவரது நெருங்கிய வட்டாரம் மூலம் தெரியவருகிறது. எனவே மேல்முறையீடு செய்யும் நடவடிக்கையை அவர் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூடா வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதி அமலாக்கத்துறை முதல்வர் சித்தராமையா மீது பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனால் இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்க துறை அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை கீழ் விசாரணை நடத்தும் அதிகாரம் படைத்துள்ளது. இந்த அதிகாரத்தின் படி முதல்வர் சித்தராமையாவை கைது செய்யலாம், விசாரணை காலத்தில் அவருக்கு சொந்தமான சொத்துகள் முடக்குவது அல்லது பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ஏற்கனவே, ஆளுநர் அனுமதி வழங்கியதை எதிர்த்து முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து முதல் நெருக்கடி கொடுத்தது. அதை தொடர்ந்து சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி மைசூரு மாவட்ட லோக்ஆயுக்தா போலீசாருக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் அனுமதி வழங்கி இரண்டாவது நெருக்கடி கொடுத்தது. இந்நிலையில் இதே புகாரில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கருதி அமலாக்க துறை சித்தராமையாவுக்கு எதிராக பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இது முதல்வருக்கு மூன்றாவது நெருக்கடியாக அமைந்துள்ளதால் அவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

The post நில முறைகேடு வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம்; சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்கு: முதல்வர் பதவிக்கு ஆபத்து appeared first on Dinakaran.

Tags : Sidharamaya ,Bangalore ,Enforcement Department ,Siddaramaiah ,Muda ,Mysore Municipal Development ,Minister ,Dinakaran ,
× RELATED பெங்களூரு போலீஸ் விசாரணை பிரபல டைரக்டர் மீது ஓரின சேர்க்கை புகார்