×

பொது நலன் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


புதுடெல்லி: ‘பொது நலனுக்காக எனக் கூறி அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தி விட முடியாது’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரா வீட்டு வசதி வாரியம் கடந்த 1986ம் ஆண்டு, மறுசீரமைப்புக்காக தனியார் சொத்துக்களை அரசு கையகப்படுத்தலாம் என சட்ட திருத்தம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து மும்பையை சேர்ந்த சொத்து உரிமையாளர்கள் சங்கம் 1992ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் 2002ல் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதில், தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகள் ஒரே மாதிரியாகவும், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பையும் வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘‘அரசியலமைப்பின் 39 பி பிரிவின்படி, தனியாருக்கு சொந்தமான தங்கம், நிலம் உட்பட அனைத்து சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தலாம் என்ற நீதிபதி கிருஷ்ணய்யரின் முந்தைய தீர்ப்பை ஏற்க முடியாது. பொது நலனுக்காக தனியார் சொத்துக்களை அரசு கையகப்படுத்த சட்டப்பிரிவு 31சி, பிரிவுகள் 39 பி, சி ஆகியவை அனுமதிக்கின்றன. ஆனாலும், பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது.

இருப்பினும், சில வழக்குகளில் தனியார் சொத்துக்கள் மீது மாநிலங்கள் உரிமை கோரலாம்’’ என உத்தரவிட்டுள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில் இந்த தீர்ப்பு இறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில், தனியார் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது என்று கூறுவது ஆபத்தானது என கூறியிருந்த தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதியின் கருத்துக்கு நீதிபதிகள் நாகரத்னா, துலியா எதிர்ப்பு
தனியார் சொத்துக்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் கோட்பாடு தீங்கு செய்தது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சுதன்ஷு துலியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி நாகரத்னா கூறுகையில்,’ தலைமை நீதிபதியின் இந்த கருத்துகள் தேவையற்றவை, நியாயமற்றவை. அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு தீங்கு செய்ததாக முத்திரை குத்த முடியாது’ என்றார். ​​நீதிபதி துலியா,’ இந்த விமர்சனம் கடுமையானது. அதைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பாக நீதிபதி கிருஷ்ணய்யர் கொள்கைகள் என்று தீர்ப்பில் இடம் பெற்ற கருத்துக்களுக்கு எனது கடும் கண்டனத்தையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்’ என்றார். 2027ல் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நீதிபதி நாகரத்னா பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யரை விமர்சித்த தலைமை நீதிபதி
தனியார் சொத்துகள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் தெரிவித்த கடுமையான பொருளாதாரக் கோட்பாட்டை தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் விமர்சனம் செய்துள்ளார். அதில்,’ நீதிபதி கிருஷ்ண ஐயர் அணுகுமுறையில் உள்ள கோட்பாட்டுப் பிழையானது. ஒரு கடுமையான பொருளாதாரக் கோட்பாட்டை முன்வைத்தது. இது அரசியலமைப்பு நிர்வாகத்திற்கான பிரத்யேக அடிப்படையாக, தனியார் வளங்களின் மீது அரசின் அதிக கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது’ என்று குறிப்பிட்டார்.

The post பொது நலன் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Maharashtra Housing Board ,
× RELATED காலி மருத்துவ இடங்களை வரும் 30க்குள்...