ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். ஏழைகளுக்கு ₹15 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று இந்தியா கூட்டணி தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. 81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவ.13 மற்றும் நவ.20 ஆகிய 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. நவ.23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் இந்தியா கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ கூட்டணி இன்னொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் நேற்று தலைநகர் ராஞ்சியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ராஷ்ட்ரீய ஜனதாதள ஜார்க்கண்ட் மாநில தலைவர் ஜேபி யாதவ் ஆகியோர் நேற்று கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் 7 உத்தரவாதங்கள் இடம் பெற்றுள்ள அந்த தேர்தல் அறிக்கையில் சமூக நீதியை உள்ளடக்கி, எஸ்டிகளுக்கு 14ல் இருந்து 28 சதவீதமாகவும், எஸ்சிகளுக்கு 10ல் இருந்து 12 சதவீதமாகவும், ஓபிசியினருக்கு 26ல் இருந்து 27 சதவீதமாகவும் இடஒதுக்கீடு உயர்த்தப்படும். இளைஞர்களுக்கு 10 லட்சம் அரசு வேலை வழங்கப்படும். ஏழைகளுக்கு ₹15 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஏழைகளுக்கான இலவச மாதாந்திர ரேஷனை 5 கிலோவிலிருந்து 7 கிலோவாக உயர்த்தி வழங்கப்படும். ஜார்க்கண்டில் ₹450க்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பது உள்பட பல வாக்குறுதிகள் அந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
The post ஜார்க்கண்ட் தேர்தல் அறிக்கை 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: இந்தியா கூட்டணி வாக்குறுதி appeared first on Dinakaran.