×
Saravana Stores

ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை: 10 ஆண்டில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. மேலும் கடந்த 10 ஆண்டில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதை காங்கிரஸ் உறுதிசெய்யும் என்று தெரிவித்துள்ளது. ஆனால் ‘ஹத் பத்லேகா ஹலத்’ என்ற தலைப்பிலான தேர்தல் அறிக்கையில் ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் கூறப்படவில்லை. அதேநேரம் இடம்பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்கள் ஜம்மு காஷ்மீர் திரும்புவதற்கும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்க நடவடிக்கைகளை எடுப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தது.

மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை வழங்குவதாக அக்கட்சி உறுதியளித்தது. குளிர்காலத்தில் 6 மாதங்களுக்கு ஜம்முவில் இருந்து ஆட்சி அதிகாரம் நடத்தப்படும் என்றும், கோடையில் ஸ்ரீநகருக்கு மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் கூறியுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு வேலைகள், அரசு ஒப்பந்தங்கள், நில ஒதுக்கீடு மற்றும் இயற்கை வளச் சலுகைகள் ஆகியவற்றில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் (பணியில் உள்ளவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள்) மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க முதல் 100 நாட்களுக்குள் லோக் ஆயுக்தாவை நியமிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000, விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 4,000, இளைஞர்களுக்கான நிதிஉதவி உள்ளிட்ட வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஜம்மு – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை என்பதால், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை காங்கிரஸ் ஏற்பதாகவே கருதப்படுகிறது. ஜம்மு – காஷ்மீர் தேர்தல் களத்தில் இருக்கும் சில கட்சிகள், மீண்டும் சிறப்பு அந்தஸ்து கொண்டு வரும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகள் அளித்துள்ளன.

The post ஜம்மு-காஷ்மீருக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதுவும் குறிப்பிடவில்லை: 10 ஆண்டில் ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,NEW DELHI ,Jammu-Kashmir ,Jammu ,Kashmir ,Dinakaran ,
× RELATED இமாச்சல் காங்கிரஸ் கூண்டோடு கலைப்பு