புதுடெல்லி: நாடு முழுவதும் 16வது தேசிய வாக்காளர் தினம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 1950ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தொடங்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய ஒன்றிய அரசால், குறைவான வாக்குப்பதிவை சரிசெய்யவும், இளைஞர்களை அதிகளவில் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பது, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது மற்றும் நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். தற்போது 2026ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியான இன்று, 16வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக்கருத்தாக ‘என் இந்தியா, என் வாக்கு’ என்பதையும், ‘இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் குடிமக்கள்’ என்ற வாசகத்தையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் தேர்தல் நேர்மைக்கான ‘டெல்லி பிரகடனம் 2026’ ஏற்கப்பட்டதுடன், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று நடைபெறும் விழாவில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன், சிறந்த தேர்தல் அதிகாரிகளுக்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன.
